தமிழக அரசு போக்குவரத்து கழகம் தென்னிந்தியாவில் மிகபெரிய போக்குவரத்து கழகம் ஆகும். தமிழகத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்களில் தலைமை அலுவலகம் கும்பகோணம் கோட்டத்தில் மாவட்டத்தின் தலைமையிடத்தில் அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கும்பகோணம் போக்குவரத்து கழகத்தின் மூலம் ஏ.சி. பஸ், சாதாரண பஸ்கள், புறநகர் பஸ்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.


லட்சம் பயணிகள்:


கோயில்களின் நகரமாக விளங்கும் கும்பகோணத்தில் இருந்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளான சென்னை, கடலூர், விழுப்புரம், சேலம், மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட பயணிகள், சுற்றுலாப்பயணிகள் என்று தினமும் பஸ்களில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகம்தான். தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு பயணம் செல்கின்றனர்.


இதே போல் கும்பகோணத்தில் இருந்து நவகிரக கோயில்களுக்கும், கும்பகோணத்தை சுற்றியுள்ள ஆறு முருகன் கோயில்களுக்கு சிறப்பு சுற்றுலா பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு பஸ்களில் முன்பு டிக்கெட் பயண கட்டணம் அச்சடிடப்பட்டு கண்டக்டர் கிழித்து கொடுப்பார். பயணிகள் செல்லும் தூரத்திற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட தொகை உள்ள டிக்கெட்டை தரப்படும்.




டிக்கெட்டில் இருக்குங்க குழப்பம்


ஆனால் தற்போது அனைத்தும் நவீன மயமாக்கப்பட்டு வரும் நிலையில், அரசு பஸ்களிலும் டிக்கெட் கொடுப்பதும் நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி அரசு பஸ்களில் டிக்கெட் கொடுக்கும் சிறிய மிஷின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் இந்த மிஷின் மூலம் டிக்கெட் கொடுத்தால் வாங்கும் பயணிகளுக்கு நாம் எங்கு செல்கிறோம் என்பதே குழப்பம் ஆகிவிடும். அவற்றில் ஊரின் பெயர் ஆங்கிலத்தில் ஒன்றும், தமிழில் ஒன்றாகவும் உள்ளது. இதுதான் பயணிகள் குழப்பத்திற்கு முக்கிய காரணம்.


நாங்கள் எந்த ஊருக்குதான் செல்கிறோம்


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கும்பகோணம், தஞ்சை வழியாக மதுரைக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சைக்கும், பாபநாசத்தில் இருந்து தஞ்சைக்கும் சென்ற பயணிகளுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டில் ஆங்கிலத்தில் கும்பகோணம், தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் என்றும், பாபநாசம்  தஞ்சாவூர் பழைய பஸ்  நிலையம் என்றும் இருந்துள்ளது. ஆனால் தமிழில் கும்பகோணம் அய்யம்பேட்டை, பாபநாசம் அய்யம்பேட்டை என்று உள்ளது.


இதனால் வெகுவாக குழப்பம் அடைந்த பயணிகள் ஊர் பெயர் தமிழில் ஒன்று, ஆங்கிலத்தில் ஒன்று வருவதால் நாங்கள் கேட்ட ஊருக்கு டிக்கெட் கொடுக்கவில்லை என்று நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வழியில் செக்கிங் வந்தால் எங்களுக்குதானே பிரச்னை என்று கேட்டு கண்டக்டருடன் பிரச்னை செய்துள்ளனர்.


நடத்துனருடன் ஏற்படும் வாக்குவாதம்


பஸ்களில் வழங்கப்படும் டிக்கெட்டில் தமிழ் ஆங்கிலம் என்று 2 மொழிகளிலும் சம்பந்தம் இல்லாமல் உள்ளதால் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் வீண் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதுகுறித்து கேட்டால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட டிக்கெட்டின் முந்தைய நிறுத்தத்தின் பெயர் வரும். எங்களுக்கு அதனால் குழப்பம் ஏற்படுகிறது என்று கண்டக்டர்கள் கூறுவதாக பயணிகள் தெரிவித்தனர்.


எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சரிசெய்யவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.