தஞ்சாவூர்: பிரச்னைக்குரிய தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைத்தால் ஒர்க் அவுட் ஆகுமா? ஆகாதா என்பதற்காக தற்காலிகமாக தடுப்புகள் வைத்து சோதனை முயற்சி நடந்து வருகிறது. 


போக்குவரத்து பாதிப்பால் மேம்பாலம் கேட்டனர்


தஞ்சை ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுந்தது. வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து போக்குவரத்து நெரிசல் கூடுதலாகி கொண்டே வந்ததால் சாந்தப்பிள்ளை ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்ட விதம் இன்றளவும் சர்ச்சையான ஒன்றாகத்தான் உள்ளது.


இந்த மேம்பாலத்தை ஒட்டி அணுகு சாலை அமைக்கப்பட்ட போதிலும் மேரீஸ்கார்னர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பகுதியில் தனியார் பள்ளிகள், பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. மேலும் ரெயில்வே குட்ஷெட் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் போன்றவை சென்று வருகின்றன.


திரும்ப முடியலையே... போக்குவரத்து நெரிசல் தொடர்ந்ததே!!!


இதனால் தொம்பன்குடிசை பகுதியில் இருந்து மேம்பாலம் வழியாக வரும் வாகனங்கள் மேரீஸ்கார்னர் பகுதியில் திரும்பி ரெயிலடி பகுதிக்கு வர வேண்டுமானால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. காலை மற்றும் மாலையில் பள்ளி தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரத்தில் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு முடிவே ஏற்படவில்லை.


கடும் அவதிக்குள்ளான வாகன ஓட்டுனர்கள்


மேலும் வாகனங்கள் திரும்பி செல்வதற்காக மேம்பாலத்தில் இருந்து சில அடிதூரம் வரை கான்கிரீட் தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டன. இதனால் வாகன ஓட்டுனர்களும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.


சோதனை முயற்சியாக சிறிய ரவுண்டானா


இதையடுத்து இந்த பகுதியில் மேம்பாலம் முடிவடையும் இடத்தில் சிறிய ரவுண்டானா அமைத்து பக்கவாட்டில் செல்லும் வாகனங்களை எளிதில் திருப்பி விட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும் என அதிகாரிகள் ஐடியா செய்துள்ளனர். இதற்கு முதல் கட்டமாக மேம்பாலம் முடிவடையும் பகுதியில் சிறிய ரவுண்டானா சோதனை அடிப்படையில் அமைத்து ஆய்வு செய்வது என முடிவு செய்தனர்.


ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்


அதன்படி கான்கிரீட் தடுப்புகள் இருந்ததை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றி அந்த பகுதியில் பிளாஸ்டிக் தடுப்புகளைக்கொண்டு 3 மீட்டர் சுற்றளவு கொண்ட ரவுண்டானா அமைக்கும் வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டு வாகனங்கள் எளிதில் திரும்பி செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா? ஆகாதா என்பது இனி வரும் நாட்களில் தெரிந்து விடும். 


இதனை நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகு கோட்ட பொறியாளர் மனுநீதி, கட்டுமான மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் செந்தில்குமார், கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) பூங்கொடி, உதவி கோட்ட பொறியாளர்கள் சத்தியன், செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


இந்த ரவுண்டானா சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை, விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்ட இடத்தில் கான்கிரீட்டால் ரவுண்டானா அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.