விழுப்புரம் நாகப்பட்டினம் இடையே 194 கிலோ மீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற கடந்த 2012-ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  இந்த 4 வழிச்சாலை திட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் கூட்டுசாலையில் இருந்து நாகப்பட்டினம் புறவழிச்சாலை தொடங்குகிறது. இத்திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தம் 134 கிராமங்கள் வழியாக கடக்கிறது.




இந்த 4 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த சாலைப்பணிக்காக மத்திய அரசு 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்த நிதி மூலம் சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அந்தந்த மாவட்ட வருவாய்த்துறையினர் ஈடுபட்டு நிலங்களை கையகப்படுத்தி வருகின்றனர்.




இப்பணிகள் 4 ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்த நிலையில் மக்களிடம் கருத்து கேட்காமலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் சில கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் இத்திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதையடுத்து பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் இப்பணிக்கான இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டதையடுத்து கடந்த ஜூலை மாதம் முதல் இப்பணிக்காக இடம் கையகப்படுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் தொடங்கியுள்ளனர்.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடுக்காய்மரம் கிராமத்தில் நடுவே நான்கு வழிச்சாலைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்ந சூழலில், கடுக்காய்மரம் கிராமத்தை சேர்ந்த 78 வயதான  சம்பந்தம் என்பவர் உடல்நலம் குறைவால் நேற்று உயிரிழந்தார். அந்த கிராமத்தின் சுடுகாடு இருந்த இடத்தை நான்கு வழிச் சாலைக்காக விரிவாக்கம் செய்யப்பட்டதால், அவரின் உடலை அடக்கம் செய்ய  சுடுகாடு இல்லாமல் நான்கு வழிச்சாலைக்காக சுத்தம் செய்யப்பட்டுவரும்  சாலையின் நடுவே இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்தனர். 




மேலும் கடுக்காய்மரம் கிராமத்தில் சுடுகாடு இல்லாததால் கிராம மக்கள்  வரும் காலங்களில் நான்கு வழிச்சாலை பணி முழுவதும் முடிந்த பின்பு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யமுடியாத நிலைமை உள்ளதாக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இருந்தபோதிலும் ஆணையர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழ்நாடு அரசு உடனடியாக கடுக்காய்மரம் கிராமத்தில் சுடுகாடு அமைத்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.