வட கிழக்கு பருவ மழையை தொடர்ந்து கும்பகோணம் பகுதியில் கொள்ளிடம் கரையோர கிராமங்களில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கும்பகோணம் அருகே கொள்ளிடம் கரையோர கிராமங்களில், மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.விஜயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.



வருடந்தோறும் பெய்து வரும் பலத்த மழையின் போது, கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்டு வந்தது. அப்போது கொள்ளிடம் ஆற்றின் கரையோரமான கபிஸ்தலம், குடிதாங்கி, நீரத்தநல்லுார் உள்ளிட்ட கரையோர கிராமங்களில், கரைகள் உடைக்கப்பட்டு, ஆற்றின் நீர் ஊருக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு, இரண்டு மடங்கு கூடுதலாக மழை பெய்து வருவதையடுத்தும், கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதையடுத்து, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பாதுகாப்பாக உள்ளதா, பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையொட்டியும், மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ள உபரி நீர், கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.  கொள்ளிட கரையில் திருவையாறு அருகே விளாங்குடி முதல் கும்பகோணம் அருகே அனைக்கரை வரை சுமார் 50  கிலோ மீட்டர் வரையுள்ள கொள்ளிட கரையோர கிராமங்களில், தாழ்வாக உள்ள பகுதிகள், கடந்த காலங்களில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகள், நிவாரண முகாம்கள் ஆகியவற்றை தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் முதன்மை செயலாளருமான எஸ்.விஜயகுமார் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.


முன்னதாக பாபநாசம் ஒன்றியம் வீரமாங்குடி ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 750 பேர் தங்கும் படி அமைக்கப்பட்டுள்ள  இடங்களையும், அதனை தொடர்ந்து மேல கபிஸ்தலம் ஊராட்சியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சுமார் 2,750 பேர் தங்கும்படி அமைக்கப்பட்டுள்ள இடங்களையும்,  கடந்த 2007 ஆம் ஆண்டு வெள்ளத்தால் குடிதாங்கி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. இதனை பார்வையிட்ட அதிகாரிகள், பொது மக்கள் தங்கும் பள்ளிகள், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், மழை வெள்ளத்தின் போது தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நிவாரண முகாமில் தங்க வைக்க உரிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினர்.




இதை தொடர்ந்து கும்பகோணம்-திருவையாறு சாலையில் புத்தூர் மண்ணியாற்று கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை ஆய்வு செய்தனர். தேவையான அளவு  மணல் மூட்டைகளை இருப்பு வைக்க உத்தரவிட்டனர். இந்த ஆய்வின்போது, அரசு தலைமை கொறடா கோவிசெழியன், எஸ்பி ரவளிப்பிரியாகாந்தபுனேனி,  பாபநாசம் ஒன்றிய குழுத்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். வடகிழக்கு பருவ மழையின் போது, பொது மக்கள் பாதிக்காதவாறு அனைத்து முன்னேற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது, அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.