தஞ்சாவூர்: கொல்கத்தா ஆர்ஜிகர் அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு ஏஐடியூசி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.


கொல்கத்தாவில் ஆர்ஜிகர் அரசு மருத்துவக் கல்லூரி முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் உடல் சிதைக்கப்பட்டு, கை, கால்கள் உடைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். 


மருத்துவரின் கொலையில் குற்றவாளிகள் கைது செய்யப்படணும்


மருத்துவரின் கொலைக்கான நீதி கேட்டு நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர், இவர்கள் மீது அரசு கடுமையான அடக்க முறைகளை கையாண்டு வருகிறது இதை உடனே கைவிட வேண்டும் .அரசு மருத்துவர் மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் முழுமையாக கைது செய்யப்படவில்லை. உடன் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் இன்று நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடந்தது. 


தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் வெ.சேவையா ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் க.அன்பழகன், தெருவியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், மின்வாரிய சம்மேளன மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் கோ.மணிமூர்த்தி, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் இரா.செந்தில்நாதன், ஓய்வு பெற்றவர்கள் சங்க நிர்வாகி எஸ்.மனோகரன், கட்டுமான சங்க துணை தலைவர் பி.செல்வராஜ், உடல் உழைப்பு சங்க நிர்வாகிகள் கல்யாணி, சத்யா, சிகப்பியம்மாள், ஆம்புலன்ஸ் சங்க தலைவர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


அதிர்வலைகளை ஏற்படுத்திய கொலை விவகாரம்


மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.கொல்கத்தா காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த 13ம் தேதி உத்தரவிட்டது.


சிபிஐ விசாரணையில் சிக்கினர்


பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட தினத்தன்று, ஆர்ஜி கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் 4 மருத்துவர்கள் பணியில் இருந்தது. சிபிஐ விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சந்தீப் கோஷ் உள்பட 5 பேரையும் கைது செய்த சிபிஐ, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் மற்றும் இறந்து கிடந்த பெண் மருத்துவரின் உடலருகே கண்டெடுக்கப்பட்ட புளூடூத் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சந்தீப் கோஷ் உள்பட 5 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்க கோரி சிபிஐ தரப்பில் கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கொலை வழக்கிற்கு நியாயம் கேட்டு அனைத்து அமைப்புகளும் பாரபட்சமின்றி போராட்டம் நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.