தஞ்சாவூர்: யப்பா என்னப்பா நடக்குது... சுதந்திர தினவிழாவில் சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டு சான்றிதழ் பெற்ற செவிலியர், நோயாளிகளிடம் பணத்தை கறாராக கேட்டு வாங்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதுதான் இப்போது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. இது நடந்துள்ளது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில்தான்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், செவிலியர் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ஷீலா. இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்த சுதந்திர தினவிழாவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டு சான்றிதழை வழங்கினார். ஆஹா மருத்துவப்பணியாளர்களில் இவர் சிறப்பான பணியாற்றி இருக்காரே என்று விழாவில் பங்கேற்றவர்கள் பாராட்டி தள்ளினர். ஆனால் அடுத்த 3 நாட்களில் காத்திருக்கிறது ஆப்பு என்று தெரியாமல். இப்போது அந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களை கடும் கோபமாக மாறியுள்ளது. அப்படி என்ன நடந்தது. ஒற்றை வீடியோ வெளியாகி பாராட்டியவர்களே திட்டும் அளவிற்கு மாற்றிவிட்டது.
இந்நிலையில், ஷீலா பெண்கள் வார்டில் அனுமதிக்கப்பட்ட இருந்த நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் கேட்டு வாங்கியுள்ளார். இதனை நோயாளி உறவினர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சிறந்த செவிலியருக்கான சான்றிதழ் பெற்ற ஒருவர், நோயாளிகளிடம் பணம் வாங்கும் வீடியோ பேசும் பொருளாகியுள்ளது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை. ஆனால் ஷீலா பணத்தை கேட்டு வாங்குவது தெளிவாக உள்ளது.
இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீனா கூறியதாவது: வீடியோ தொடர்பாக செவிலியர் ஷீலாவிடம் விசாரணை நடத்தி, மெமோ வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார். மொமோ கொடுத்தால் போதுமா? ஷீலா போல் இன்னும் மருத்துவமனையில் பலரும் உள்ளனர். ஏழை மக்கள் அரசு மருத்துவமனையை நாடி வருவது எதற்காக. பணம் இல்லை. இங்கு வழங்கப்படும் இலவச சிகிச்சையை பெற்று உடல் நலத்தை காத்துக் கொள்வதற்காகதானே. அதற்கும் பணம் லஞ்சம் வாங்குவது சரியா?
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் நோயாளிகளிடம், வீல் சேர், ஸ்ட்ரெச்சர் தள்ளுவதற்கும், ஆபரேஷன் தியேட்டர் அழைத்துச் செல்வதற்கு , காயமடைந்து வரும் நபர்களுக்கு முதலுதவி அளிப்பதற்கும் என பணம் வசூல் செய்து செய்வது தொடர்பாக, பலரும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் கவணத்திற்கு கொண்டு சென்று எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில், செவிலியர் ஷீலா பணத்தை தைரியமாக கேட்டு வாங்கியதுபோல பலரும் பணம் வாங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் இவரை சிறந்த பணியாற்றியவர் என்று எப்படி தேர்வு செய்தார்கள்.
இதன் பின்னணியில் அரசியல் உள்ளதா? நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் கேட்டு வாங்குவதுதான் சிறந்த பணியா? அதுவும் சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டரிடம் இருந்து சிறந்த பணிக்கான சான்றிதழை மனசாட்சி இல்லாமல் ஷீலா பெற்றது எப்படி? என்று பெரும் விவாதத்தை இந்த ஒற்றை வீடியோ மக்களுக்கு ஏற்படுத்தி விட்டது. மெமோ கொடுப்பது, சஸ்பெண்ட் செய்வது மட்டுமே சரியானது அல்ல. கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும் பாராட்டு சான்றிதழை மீண்டும் மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.