மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதி 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி முத்துவேலர் அஞ்சுகம் அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். தொடர்ந்து தமிழக அரசியலில் 60 ஆண்டு காலம் பங்களிப்பு அளித்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பதிமூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அதில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து 2011 மற்றும் 2016 ஆகிய  ஆண்டுகளில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகினார்.  குறிப்பாக  திருவாரூருக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை , மத்திய பல்கலைக்கழகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு கலைக் கல்லூரிகள் போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு கருணாநிதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கியும் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது .அதனைத் தொடர்ந்து அவரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் அவர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில்  அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் திமுக நிர்வாகியின் உணவகத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் பொது மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியை திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து உணவு பொட்டலங்களை பெற்றுச் சென்றனர்



 

இதேபோன்று திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் முடி வெட்டும் தொழிலாளர்கள் ஆயிரம் நபர்களுக்கு அரிசி மளிகைப் பொருட்கள் காய்கறி அடங்கிய தொகுப்பினை சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பிரகாஷ் ஒன்றிய செயலாளர் தேவா இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினி சின்னா கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்



 

அதனைத் தொடர்ந்து கொடிக்கால்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார் அனைவருக்கும் தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் இதே போன்று மாவட்டம் முழுவதும் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.