ஒடிஷாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு உள்ளகி 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இன்று ஒரு நாள் அரசு நிகழ்ச்சி அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100ம் ஆண்டு பிறந்தநாள் விழா திமுகவினரால் எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் திமுகவினர் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே மங்கை நல்லூரில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு தி.மு.க ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில், திமுகவினர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, தென்னங்கண்றுகள் வழங்கினர்.
மூவலூரில், ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி இனிப்புகள் வழங்கினர்.அதேபோன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ராமசேகர் தலைமையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். மயிலாடுதுறை நகர செயலாளர் செல்வராஜ் தலையில் தி.மு.கவினர் பேருந்து நிலையம் பகுதியில் இனிப்பு வழங்கி தென்னங்கன்றுகள் வழங்கினர். இதுபோல், செம்பனார்கோயில், திருக்கடையூர், சீர்காழி, குத்தாலம் பகுதிகளிலும் தி.மு.கவினர் கலைஞர் உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, இனிப்புகள் வழங்கி, நலதிட்ட உதவிகள் வழங்கினர்.
இந்நிலையில், மயிலாடுதுறை திமுக நகரக் கழகம் சார்பில் கிட்டப்பாடி அங்காடி முன்பு கலைஞர் உருவப்படம் வைத்து திமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். நகராட்சி நகர மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான செல்வராஜ் தலைமையில் திமுகவினர் கலைஞர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு தென்னங்கன்றுகள் மற்றும் உணவுகள் வழங்கினார். பொதுமக்கள் தென்னங்கன்றுகளையும் உணவு பொருள்களை முண்டியடித்து வாங்கி சென்றனர்.
இந்நிகழ்ச்சியால் பேருந்து நிலையம் பகுதியில் அரைமணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் வெயிலில் பெரும் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சிக்கி தவித்தது, இதனை கண்ட காவலர் உடனடியாக போக்குவரத்தை சரி செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.