தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் கட்டப்பட்டு வரும் மேற்கூரை அமைக்கும் பணியை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டார். தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. கால்நடை பராமரிப்புத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் நடந்து வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அவ்வபோது ஆய்வுகளும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அருங்காட்சியகம், ராஜாளி பறவைகள் சரணாலயம், மாவட்ட மைய நூலகத்தில் நடந்து வரும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். 


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு முதல்வர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படும் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அருங்காட்சியகம், ராஜாளி பறவைகள் சரணாலயம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.


தொடர்ந்து தஞ்சாவூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகம் அருகே சோழன் அருங்காட்சியம் அமைப்பது குறித்தும் பார்வையிடப்பட்டது. வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையம், ஆதார் சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், மாநகராட்சி மேம்பாலம் அருகே மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.


மாவட்ட மைய நூலகத்தில் கட்டப்பட்டு வரும் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி திருவள்ளுவர் வணிக வளாக கட்டிட பணிகள், அய்யாசாமி வாண்டையார் நினைவு பேருந்து நிலையம், ராஜப்பா பூங்கா, காந்தி சாலை கல்லணை கால்வாய் அருகே ராணி வாய்க்கால் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவது போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.


இப்பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமேன சம்பந்தப்பட்ட அலுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி கோட்ட பொறியாளர் கீதா, வட்டாட்சியர் சக்திவேல், மாநகராட்சி செயற்பொ றியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.