Coromandel Express Accident : ஒடிஷா ரயில் விபத்து நடைபெற்ற பகுதியில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
விபத்து நடந்தது எப்படி?
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை 261 பேர் உயிரிழப்பு
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒடிஷாவில் இன்று அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதேபோல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 261 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒடிஷா ரயில் விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி
இந்நிலையில், விபத்து நடத்த இடத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பாலசோரில் ரயில் விபத்து நடத்த இடத்தில் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார் பிரதமர் மோடி. மேலும், கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.