கார்த்திகை தீபத் திருவிழா - சுவாமிமலையில் குவிந்த பக்தர்கள்

’’சுவாமிமலை போலீஸார் செய்திருந்தனர். திருக்கார்த்திகையை முன்னிட்டு கும்பகோணத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது’’

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளி உள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர்.ஒம் எனும் பிரணவ மநதிரத்தை தந்தையான சிவபெருமானுக்கு, மகனாகிய முருகன் உபதேசம் செய்த தலம் என்பதால், முருகப்பெருமான் இக்கோயிலில் தகப்பன்சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.

Continues below advertisement


முருகனின் அறுபடைவீடுகளில் இதுவும் ஒன்றாகும். தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் திருமுறையில் உள்ளன. கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய இராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும்.இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து விழா நாட்களில் தினமும் சுவாமி உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.


இவ்விழாவின் முக்கிய நாளான திருக்கார்த்திகை தினத்தில், அதிகாலை 3 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கார்த்திகை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, கோயில் உள் பிரகாரத்தில் ரதரோஹனம் (சிறிய தேரில்) சுவாமி புறப்பாடு நடைபெற்றது.பின்னர் காலை 5 மணி முதல், இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு தங்க கவசம், வைரவேல் சாத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் கோயிலிலிருந்து பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, அதன்பின்னர் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணியர், வள்ளி - தெய்வானையும், வெள்ளிமயில் வாகனத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி உள்பிரகார புறப்பாடும், அதன்பிறகு தீபக்காட்சியும், இரவு சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான 20-ம் தேதி காலை கோயில் வளாகத்தில் உள்ள வஷ்ரதீர்த்தத்தில் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவாமிமலை போலீஸார் செய்திருந்தனர். திருக்கார்த்திகையை முன்னிட்டு கும்பகோணத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola