மாடுகளின் இருப்பிடமாக மாறிப்போன காரைக்கால் கடற்கரை. சுற்றுலா பயணிகள் அச்சம். நடவடிக்கை எடுக்க கோரிக்கை. 

 

காரைக்கால் மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடம் என்றால் அது  காரைக்கால் கடற்கரைதான். தினந்தோறும் மாலை வேலைகளிலும், விடுமுறை நாட்களிலும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமானவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அழகிய கடற்கரை மட்டுமின்றி அரசலாற்றை ஒட்டி கட்டப்பட்டுள்ள கட்டைகளில் அமர்ந்து நண்பர்கள், மற்றும் குடும்பத்தோடு வருபவர்கள் மகிழ்வுடன்  அளவளாவிக் கொள்வதை காணமுடியும்.  மக்களின் மகிழ்ச்சிக்குரிய இடமான காரைக்கால் கடற்கரை பகுதி முழுவதும் மாடுகளின் இருப்பிடமாக மாறியிருக்கிறது.

 

இரவு, பகலாக எங்கு பார்த்தாலும் மாடுகள் கூட்டம் ,கூட்டமாக அலைகின்றன. பெருத்த உருவத்தோடும், நீண்ட கொம்புகளோடும் திரியும் மாடுகளை கண்டு சுற்றுலாப்பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். குழந்தைகளோடு கடற்கரைக்கு வருபவர்கள் மிகுந்த பயத்துடனேயே மாடுகளை கடக்க வேண்டியுள்ளது.

 



 

 

கடற்கரை பகுதியில் மக்கள் அமரும் இடங்கள் முழுவதும் மாட்டு சாணங்கள் நிறைந்துள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து கொண்டுதான் நடக்க வேண்டும். அங்கு தெருநாய்களின் தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன. கூட்டமாக திரியும் நாய்கள் கூரிய பற்களை நீட்டிக்கொண்டு ஒன்றொடொன்று சண்டையிட்டுக்கொள்வதை கண்டாலே அச்சம் அதிகரிக்கும். சண்டையிட்டுக்கொள்ளும் நாய்கள் எப்போது மனிதர்கள் மீது பாயும் என்று சொல்லமுடியாது.

 

மாடுகளாலும், நாய்களாலும் அழகிய கடற்கரை பகுதிகள் அசுத்தமடைவதோடு சுற்றுலா பயணிகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி வருவதால் அவற்றை கடற்கரை பகுதியிலிருந்து வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.