காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

 

63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார், இறைவனிடம் தவமிருந்து மாங்கனி பெற்றதாக ஐதீகம். இதனை சித்தரிக்கும் விதமாக  காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்காலில் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு மாங்கனித் திருவிழா நேற்று மாலை காரைக்கால் அம்மையார் கோவிலில் மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.  அதனை தொடந்து இன்று காரைக்கால் அம்மையார் கோவிலில் புனிதவதி தயாரின் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

 



 

பரமதத்த செட்டியாரை புனிதவதி தாயார் எதிர்கொண்டு அழைத்ததும், அம்மையாரின் கழுத்தில் பரமதத்த செட்டியார் கெட்டி மேளம் முழங்க மாங்கல்யம் அணிவித்தார். அப்போது கூடியிருந்த  பக்தர்கள் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்று பக்தி பரவசமடைந்தனர்.  திருக்கல்யாண வைபவத்தில் காரைக்கால், நாகை, திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 



 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி இறைத்தல் திருவிழா நாளை 13ஆம் தேதி காலை நடைபெறுகிறது. மாங்கனி திருவிழாவில் வீசி எடுக்கப்படும் மாம்பழங்கள் இறைவன் அளித்த அமுதமாக நினைத்து பிரசாதமாக உட்கொள்வதால், குழந்தை பாக்கியம், திருமண தோஷம் உள்ளிட்ட பல்வேறு குறைகள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  திருவிழாவை முன்னிட்டு நாளை லட்ச கணக்கான பக்தர்கள் வருவதை முன்னிட்டு காரைக்காலில் 500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.