தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுக்காவில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தஞ்சை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா தலைமையில் நடைபெற்றது


திருவையாறு தாலுக்காவில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தஞ்சை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா தலைமையில் தொடங்கியது.


நடுக்காவேரி சரகத்திற்குட்பட்ட திருவாலம்பொழில், நடுக்காவேரி கிழக்கு, நடுக்காவேரி (மேற்கு), கருப்பூர், கோனேரிராஜபுரம், மன்னார்சமுத்திரம், ஈஸ்வரன்கோவில்பத்து, வரகூர், அள்ளுர், அம்பதுமேல்நகரம், குழிமாத்தூர், வெள்ளாம்பெரம்பூர் (கிழக்கு). வெள்ளாம்பெரம்பூர் (மேற்கு) ஆகிய கிராமங்களை சேர்ந்த கணக்குகள், பட்டா மாற்றம், பதிவேடுகள், இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய விவரம் உள்பட அனைத்து பதிவேடு கணக்குகளையும் ஆய்வு செய்யப்பட்டது.


பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், நிலஅளவை உட்பிரிவு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, உள்பட 34 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதில் தாசில்தார் பழனியப்பன், சமூகபாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் அருள்பிரகாசம், குடிமைபொருள் வழங்கல் தனிவட்டாட்சியர் சுந்தரசெல்வி, மண்டல துணை வட்டாட்சியர் வெண்ணிலா, துணை வட்டாட்சியர் கலைவாணன், வருவாய் ஆய்வர் நவநீதிகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.


வரும் 16-ந்தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் கண்டியூர் சரகத்திற்குட்பட்ட தென்பெரம்பூர், நாகத்தி, மேலத்திருப்பந்துருத்தி (முதன்மை), மேலத்திருப்பந்துருத்தி(கூடுதல்), கீழத்திருப்பந்துருத்தி, முகாசாகல்யாணபுரம், கல்யாணபுரம் 1ம் சேத்தி, உப்புக்காய்ச்சிப்பேட்டை, திருச்சோற்றுத்துறை, கல்யாணபுரம் 2ம் சேத்தி, கண்டியூர், ராஜேந்திரம், மணக்கரம்பை ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது.


வரும் 17-ந்தேதி புதன் கிழமை அன்று திருவையாறு சரகத்திற்குட்பட்ட மகாராஜபுரம், வளப்பக்குடி, சாத்தனூர், மருவூர், வைத்தியநாதன்பேட்டை, கடுவெளி, மேலபுனவாசல், புனவாசல், விளாங்குடி(முதன்மை), விளாங்குடி(கூடுதல்), செம்மங்குடி, பெரமூர், ஓக்கக்குடி திருப்பழனம், ராயம்பேட்டை, காருகுடி, திருவையாறு (கிழக்கு), திருவையாறு (மேற்கு), பெரும்புலியூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது. ஜமாபந்தி ஆண்டு தோறும் ஜுன் மாதத்திற்குள் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும். இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிருவாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்.


வருவாய் தீர்வாயத்தின் போது கூடுதலாக கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். மேலும் தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம்.


சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம். வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம்.


இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால் நிறைவேற்றப்படும்.