கொள்ளு பேரன்களை கொஞ்சி மகிழ வயதான தாத்தா பாட்டி இல்லையே என ஏங்குவேற்கு மத்தியில், அத்தி பூத்தார் போல் சில குடும்பங்களில் இன்றளவும் 100 வயது கடந்த வயதானவர்கள் வாழ்ந்து தான் வருகின்றனர். அதற்கு காரணம் அந்த காலத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட சத்தான உணவு தானியங்கள் மற்றும் உடல் உழைப்பு என்றால் அது மிகையாகாது. தோல்கள் சுருங்கி, தேகம் மெலிந்தாலும் திடகாத்திரமாய் நடந்து வரும் இந்த மூத்த குடி மூதாட்டியின் பெயர் காமாட்சி.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ள வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கணபதியின் மனைவி காமாட்சி. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவம் ( Indian National Army ) கொரில்லா படையில் பணியாற்றியவர் தான் கணபதி.
தாமரை பட்டயம் பெற்ற கணபதியின் மனைவி காமாட்சிக்கு 100 வயது பூர்த்தி அடைந்ததையொட்டி அவரது மகன்கள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் நான்கு தலைமுறை குடும்பத்தினர்கள் திருமலைராயன் பட்டினத்தில் உள்ள அபிராமி அம்மன் கோவிலில் பூர்ணாபிஷேக சாந்தி விழா கொண்டாடினர். விழாவிற்காக காமாட்சி அம்மாள் கையைப் பிடித்து அவரது மகன்களும் பேரப்பிள்ளைகளும் மண்டபத்தின் மேடைக்கு அழைத்து வந்தனர். மேடையில் வந்து அமர்ந்த மூதாட்டி, உற்றார், உறவினர்களையும், பேரப்பிள்ளைகள் மற்றும் ஊர் மக்களை பார்த்ததும், சந்தோசத்தில் திக்கு முக்காடி நெகிழ்ந்து போனார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பூர்ணாபிஷேக சுபதின விழாவில், நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், மூதாட்டியின் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் கொள்ளு பேரன்கள் என நான்கு தலைமுறை குடும்பத்தினர் காமாட்சி அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்று, அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். அதனை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற வாழ்மங்கலம் கிராமம், நாகப்பட்டினம், டி ஆர் பட்டினம், காரைக்காலைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அனைவருக்கும் நூற்றாண்டுகளை கடந்து வாழ்ந்து வரும் இந்திய தேசியப்படை வீரரின் மனைவியான காமாட்சி பாட்டி நெற்றியில் விபூதி பூசி ஆசீர்வதித்தார்.
இதனிடையே நூறு வயது நிறைந்த தாமரைப் பட்டயம் பெற்ற இந்திய தேசியப்படை வீரரின் மனைவியான வாழ்மங்கலம் காமாட்சி அம்மாவுக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோதி பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பி புகழாரம் சூட்டியுள்ளார்.
பாட்டியுடன் வாழ்ந்த காலத்தில் தனது தாத்தாவின் ராணுவ போர் பயண அர்ப்பணிப்பான அரிய விஷயங்களை அறிந்து கொண்டதாக கூறும் மூதாட்டியின் பேரப்பிள்ளைகள், கல்யாண காட்சிகளைத் தாண்டி தனது பாட்டியை இத்தனை வயது வரை பாதுகாத்து அவருக்கு பூர்ணாபிஷேக சுப தின விழா எடுத்தது தங்களுக்கு பெரும் மன நிறைவை தந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
நூற்றாண்டை கடந்த பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி மகிழ்ந்ததாக தெரிவித்த பேரப்பிள்ளைகள், தங்களுக்கு பாட்டி கையாள் ஆசிர்வாதம் கிடைத்த தருணம் சந்தோஷத்தை ஏற்படுத்திச்சி என்றும், இந்த ஆத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என மழலை பொங்க கூறினர்.
பூர்ணாபிஷேக சுபதினத்தில் உற்றார் உறவினர்கள் குடும்பத்தினர் பேரப்பிள்ளைகளை ஒரு சேர பார்ப்பது என்பது பூத்துக் குலுங்கும் நந்தவன சோலை போல் உள்ளது என்றும் எல்லோரும் நாட்டுக்காக வாழ்ந்து நற்பெயரை எடுப்பதுடன், என்னைப்போல் உற்றார் உறவினர்களுடன் மன மகிழ்வுடன் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கையுடன் காமாட்சி மூதாட்டி அன்பு கட்டளையிட்டார்.
தான் பிறந்த கிராமத்தின் பெயர் போல் மகன்கள், மருமகள்கள் மற்றும் நான்கு தலைமுறை பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷமாக 100 வயதை கடந்து வாழ்ந்துள்ளார் வாழ்மங்கலம் காமாட்சி என்றால் அது மிகையாகாது.