திருவாரூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கைகள் அடங்கிய வாசகத்தை பிரசுரம் செய்து கழுத்தில் மாட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

குறிப்பாக முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை சரண்டர் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் செவிலியர்கள் வருவாய் கிராம உதவியாளர்கள் மற்றும் ஊர் புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

 

6 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை வரன்முறை படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக்குழுவின் 21 மாதம் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட எட்டாம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.