தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்நிலையில் மழையின் காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததை மிதித்த தம்பதி பரிதாபமாக இறந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் வெகுவாக அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்தது.
இந்த மழை அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 153 மில்லி மீட்டராக பதிவானது. அதே போல், திருக்காட்டுப்பள்ளியில் 127, பூதலூர் 114, மதுக்கூர் 90, பட்டுக்கோட்டை 83, கல்லணை 73, வெட்டிக்காடு 66, ஒரத்தநாடு 64, திருவையாறு 53, கும்பகோணம் 45, ஈச்சன்விடுதி 45, அணைக்கரை 44, தஞ்சாவூர் 41 என மாவட்டம் முழுவதும் மழை பெய்துள்ளது.
இந்த மழையின் காரணமாக பேராவூரணி அருகே காலகம் ஊராட்சி மிதியக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி உடையப்பன் (70) நேற்று அதிகாலை வீட்டிலிருந்து வெளி வந்து இயற்கை உபாதையை கழிக்க வந்த போது, மழையினால் சேதமடைந்து அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார்.
இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். உடையப்பனின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி சம்பூர்ணம் (62) என்பவரும் வெளியே வந்த போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இருவரது உடலையும் பேராவூரணி போலீஸார் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று காலை பட்டுக்கோட்டை அருகே கழுகுப்புலிக்காட்டில் மழையினால் சேதமான சாலையோரத்தில் உள்ள மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில், அந்த வழியாக கடைக்கு பால் வாங்க சென்ற தெய்வாணை (70) என்ற மூதாட்டி மீது மரக்கிளை விழுந்ததில் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அதே போல் அதிராம்பட்டினத்தில் பெய்த மழையின் காரணமாக காவல் நிலையத்தை சுற்றிலும் மழை நீர் தேங்கியதால், காவலர்கள் காவல் நிலையத்துக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். தஞ்சாவூரில் பெய்த மழையின் காரணமாக வடக்கு வீதியில் உள்ள முன்னாள் நகர்மன்றத் தலைவர் கு.சுல்தான் என்பவரது பழமையான வீடு இடிந்து சேதமானது.
அதே போல் மழையின் காரணமாக தஞ்சாவூர் - ரெட்டிப்பாளையம் சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. மழை நீர் வடிய வழியில்லாததால் சாலை குளம் போல் காட்சியளித்தது. பின்னர் நேற்று பிற்பகலுக்கு பிறகு மழைநீரை பொக்ளீன் இயந்திரம் மூலம் வடிகால் ஏற்படுத்தி வடியவைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் சித்திரை பட்டத்தில் உளுந்து, எள் ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்த மழையினால் இளம் பயிராக உள்ள உளுந்து, எள் பயிர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.