தமிழ்நாட்டின் கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகளவு வருமானத்தை பெற்றுத்தரக்கூடிய நகரமாகும். மொத்த மற்றும் சில்லரை வணிகம் நடைபெறக்கூடிய நகரமாக விளங்கும் கும்பகோணத்தை சார்ந்து பல தொழில்களும் நடந்து வருகின்றது. தமிழகத்தில் உள்ள 8 பேருந்து கோட்டங்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டமும், மத்திய அரசின் பொதுத்துறைநிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி டெல்டா மாவட்டத்திற்கான தலைமை அலுவலகும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், மாவட்ட தலைமையகத்திற்கு தேவையான பதிவாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், கல்வி மாவட்டமும் தற்போது இயங்கி வருகிறது.
அதே போல் தஞ்சை மாவட்டத்திலேயே வர்த்தக கேந்திரமாக கும்பகோணம் விளங்குவதால் தஞ்சைக்கு முன்னரே கும்பகோணத்தில் வருமான வரித்துறை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. காவிரி -அரசலாறுகளுக்கு இடையே இந்த ஊர் அமைந்துள்ளது. கும்பகோணம் 1866 ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 4.96 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்நகரில் 2011ஆம் ஆண்டு கணக்கின்படி 1,40,113 பேர் 45 வார்டுகளில் வசித்து வருகின்றனர். 1866 ஆம் ஆண்டு மூன்றாம் நிலையாகவும், 1949ஆம் ஆண்டில் இருந்து முதல் நிலையாகவும், 1974ஆம் ஆண்டில் இருந்து தேர்வு நிலை நகராட்சியாகவும், 1998 ஆம் ஆண்டு முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு மேல்நிலைப் பள்ளி, 4 நடுநிலைப் பள்ளிகளும் 13 தொடக்கப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் மூன்று மருத்துவமனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. 2009ஆம் ஆண்டிலிருந்து புதை சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 150 ஆண்டுகள் பழமையான தென்னகத்தின் கேப் பிரிட்ஜ் என்றழைக்கப்படும் அரசு ஆடவர் கல்லுாரியும் இயங்கி வருகிறது.
கும்பகோணம் நகரம் வரலாற்று சிறப்புகளையும், பல அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த பெருமையையும் கொண்டது. கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜன் போன்ற உலகப்புகழ் பெற்றவர்கள் படித்த பள்ளியாகும், சாரங்கபாணி சன்னதி தெருவிலிருக்கும் யானையடி தொடக்கப் பள்ளியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் படித்தனர். கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கடந்த 30.9.2013 ஆம் ஆண்டே நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. தஞ்சாவூர் நகராட்சி கடந்த 19.2.2014 ஆம் ஆண்டு முதல் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் தற்போது நகராட்சியாக இருந்த கும்பகோணமும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து ஒரே மாவட்டத்தில் இரு மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்ததையடுத்து, அதற்கான அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதில், கும்பகோணம் சிறப்பு நிலை நகராட்சி முழுமையாகவும், தாராசுரம் முதல் நிலை பேரூராட்சி முழுமையாகவும், பழவத்தான்கட்டளை, கொரநாட்டுக்கரூப்பூர், சாக்கோட்டை, பெருமாண்டி, உள்ளூர், வளையப்பேட்டை, அண்ணலக்கிரஹாரம் ஆகிய ஊராட்சிகள் முழுமையாகவும், உமாமகேஸ்வரம், தேப்பெருமாநல்லுார், ஏரகரம், மலையப்பநல்லுார், பாபராஜபுரம், அசூர், ஆகிய ஊராட்சிகள் பகுதியாகளை, கும்பகோணம் மாநகராட்சியாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை மாநகராட்சியாக சேர்ப்பது மூலம் 2011 ஆம் ஆண்டு கணக்கின் படி 2,22,524 மக்கள் தொகையும், 2021 ஆம் ஆண்டு தற்போதைய மக்கள் தொகை 2,45,679 ஆகும், இதே போல் சராசரியாக கடைசி மூன்று ஆண்டுகளுக்கான 50.71 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 2020-2021 ஆண்டின் படி 48.33 கோடி வருமானம் கிடைத்துள்ளது.