தஞ்சாவூர்: காசா மக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  கண்டன ஆர்ப்பாட்டம்:

Continues below advertisement

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீன காசா மக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேல் அரசு உடனடியாக பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேற வேண்டும். படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா தலைமை வகித்தார். மக்கள் அதிகாரத்தின் மூத்த தலைவர் காளியப்பன் கண்டன சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் பாசிச பயங்கரவாத கும்பல் பாலஸ்தீனத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும்,  இந்திய ஒன்றிய அரசு இஸ்ரேல் உடனான தூதரகம் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள வேண்டும். பட்டினி பசியால் துடித்துக் கொண்டிருக்கும் காசா மக்களுக்கு ஐநா சபை அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி உணவு குடிநீர் மருத்துவம் உள்ளிட்ட உயிர் வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

Continues below advertisement

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும்:

உலக தொழிலாளி வர்க்கம் சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் கலை இலக்கிய கழக இணைச் செயலாளர் ராவணன், மாநகர செயலாளர் சாம்பான்,  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட பொருளாளர் ஆர்.லட்சுமணன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல்ஆப்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர செயலாளர் இடி முரசு இலக்கணன், தொழிற்சங்க அமைப்பாளர் அ.யோகராஜ், ஆட்டோ ஓட்டுனர்  பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதனை தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.இந்த போரில் இது வரை 46,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும் என்ற அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு தொடர்ந்து காசாவில் நடந்து வரும் தாக்குதல் சம்பவங்கள் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்குதான் பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.