தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான தஞ்சாவூர், திருவாரூர், நாகை,மயிலாடுதுறை மாவட்ட அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நிருபர்களிடம் பேசுகையில்,தமிழ்நாட்டில் வனப்பரப்பு 23.98 சதவீதமாக உள்ளது. இதை 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக விரிவுபடுத்த வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்டத்திலுள்ள பொது மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் கருத்துக்களை கேட்பதற்காக கூட்டம் நடைபெறுகின்றது. ஆறு மற்றும் நீர் நிலைகளில் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்துள்ளோம். ஈசா யோக மையம் தொடர்பாக தற்போது வருவாய்த்துறையினர் மூலம் அளவீடு செய்ய உள்ளோம். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை வந்த பின் முடிவு எடுக்கப்படும்.


தரையில் அமர வைத்து கூட்டம் நடத்திய ஒன்றிய குழுத் தலைவர் - திமுக-அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு



உலக அளவில் எந்த விதமான இயற்கை பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வனப்பரப்பு 33 சதவீதம் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்திலும் அதற்கான நடவடிக்கையை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.எனவே, ஒவ்வொரு ஆண்டும் 2.65 கோடி மரங்களை நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளில் 33 சதவீதப் பரப்பளவில் வனமாக்கலாம். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வனத் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, கல்வித் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், வனத் துறை, வேளாண் துறை மூலம் மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு வருகிறது.




ஒவ்வொருவரும் தங்களது பிறந்த நாளில் மரக்கன்றுகளை நடலாம். இதுபோல, தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரும் மரக்கன்றுகளை நட்டால், 7 கோடி மரங்களாகும். இது தொடர்பாகப் பள்ளிகளில் மாணவர்களிடையே ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இத்துறையில் 10 ஆண்டுகளாக இருந்தவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றது. ஊருக்குள் குரங்குகள் வருவதைத் தடுப்பது தொடர்பாகக் குழு அமைத்து ஆய்வு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல, மயில், காட்டுப்பன்றிகள் வருவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


இதில், தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள் அசோக் உப்பிரட்டி, சேகர் குமார் தீரஜ், தலைமை வனப் பாதுகாவலர் நாகநாதன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர்  செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.