தஞ்சாவூர்:


ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரம் நடும் விழா இன்று (30-05-2024) தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடப்பட்ட மரக்கன்றுகளை, அங்கு இருக்கும் மனநல பாதிப்புக்கு உள்ளானவர்கள் பராமரித்து வளர்ப்பார்கள் என மருத்துவ நிலைய அதிகாரி (RMO) திருமதி. Dr. அமுதவடிவு கூறினார்.


ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் நடைப்பெற்று வருகின்றன.


அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான தொடக்க விழா அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மேயர் சன் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் நிலைய மருத்துவ அலுவலர் Dr. அமுதவடிவு ஆகியோர் பங்கேற்றனர். 




இவ்விழாவில் பேசிய மருத்துவர் அமுதவடிவு, “எங்கள் மருத்துவமனை வளாகத்தை காவேரி கூக்குரல் இயக்கத்தின் மரம் நடும் விழாவிற்காக தேர்ந்தெடுத்ததற்கு, மருத்துவமனையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மருத்துவமனையில் சிகிச்சையில் மனநல பாதிப்புக்கு உள்ளானவர்கள் 25 முதல் 40 பேர் வரை இருக்கிறார்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் அவர்கள் பங்களிக்கும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த மரங்கள் அவர்களால் நடப்பட்டது. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பும் அவர்களிடமே வழங்கப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறினார். 


சமுதாயத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும்:


மேலும் இது குறித்து பேசிய மாவட்ட மனநல மருத்துவர் சித்ரா தேவி  கூறுகையில் “ இன்று மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த மருத்துவமனையில் செயல்படும் அவசர மற்றும் மீட்பு மையம் மூலம் மனநலம் பாதிக்கபட்டு சாலையோரங்களில் சுற்றித் திரியும் நபர்களை மீட்டு இங்கு முழுமையான சிகிச்சை தரப்படுகிறது. குறிப்பாக சமுகத்தோடு ஒன்றி இவர்கள் வாழ தேவையான பல செயல்களை இங்கு செய்கின்றோம். அந்த வகையில் இவர்களைக் கொண்டு மரக்கன்றுகளை நடுவதும், அதனை பராமரிக்க செய்வதும் சமுதாயத்திற்கும், அவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்” எனக் கூறினார்.   


இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேயர்  சன் இராமநாதன் பேசுகையில் "காவேரி கூக்குரல் குழுவோடு இணைந்து தஞ்சை மாநகராட்சியின் சார்பாக ஒரு லட்சம் மரக்கன்றுகளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஒவ்வொரு வட்டத்திலும் நட்டு, வளர்த்து மிக சிறப்பான சூழலை தஞ்சை மாநகராட்சி ஏற்படுத்தியிருக்கிறது. இதே போல ஈஷா யோக மையம் தொடர்ந்து செயல்பட எங்கள் வாழ்த்துகள்" எனக் கூறினார். அதே போன்று சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மற்றும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோரும் காவேரி கூக்குரல் இயக்க செயல்பாடுகளை பாராட்டிப் பேசினர். 




காவேரி கூக்குரல் இயக்கம்


ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 


இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.


மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.


விவசாயிகள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.