தஞ்சை மாவட்டம் திருவையாறு, திருப்பூந்துருத்தி, ஒரத்தநாடு, சூரக்கோட்டை, கும்பகோணம், பட்டீஸ்வரம் தாராசுரம் சோழபுரம், திருப்பனந்தாள், பந்தநல்லூர், அணைக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 300 ஏக்கருக்கு மேல் செங்கரும்புகள் என அழைப்படும் பொங்கல் கரும்புகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் நெருங்கும் நிலையில் விவாசயிகள் கரும்புகளை அறுவடை செய்து லாரிகள் மூலம் சென்னை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குவதற்கு மட்டும் 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கரும்பை வெறும் 11 ரூபாய்க்கு மட்டுமே வாங்கியுள்ளனர்.




இதனால் வரும் பொங்கல் விழாவின் போது, கரும்பு கட்டின் விலை வரலாறு காணாத அளவில் உயரவாய்ப்புள்ளது.தமிழக அரசு ஒரு கரும்பை 33 ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் இடைத்தரகர்கள் கமிஷன் வைத்து, கரும்பு விவசாயிகளிடம் 11 ரூபாய்க்கு வாங்கி, அரசுக்கு கொடுக்கின்றனர். இது போன்ற மோசமான செயல் தமிழக அரசுக்கு  தெரியுமா அல்லது தெரிந்தும் தெரியாதது போல் உள்ளதா என தெரியவில்லை. தஞ்சை மாவட்டம் முழுவதுமுள்ள திமுகவினர், பெரும்பாலானோர் விவசாயிகளாக இருந்தும் இதனை ஏன் தமிழக அரசுக்கு தெரியபடுத்தவில்லை என்று கேள்வி குறியாக உள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.




இது குறித்து அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கரும்பு விவசாயி தீனதயாளன் கூறும்போது, தமிழக அரசு கரும்பு ஒன்றிற்கு 33 ரூபாய் அறிவித்துள்ளது. ஆனால் எங்களிடம் வியாபாரிகள் (இடைத்தரகர்கள்) 11 மற்றும் 12 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். இது எங்களுக்கு போதுமானதாக விலை இல்லாமல் உள்ளது. ஒரு மழை காற்று அடித்தால் கரும்புகள் கீழே சாய்ந்து வீணாகிவிடும். வீட்டில் உள்ள பொருட்களை அடகு வைத்து தான் இதனை சாகுபடி செய்துள்ளோம். பொங்கல் பண்டிகையின் போது மட்டுமே இந்த கரும்புகளை விற்றால்தான். இல்லையென்றால் இந்த கரும்புகளை யாரும் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள்.




கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,  ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரும்பு வெட்ட அட்வான்ஸ் கொடுத்த வியாபாரிகள் அட்வான்ஸ் தொகையைக் கூட வேண்டாம் என்று அப்படியே திரும்பச் சென்று விடுகின்றனர். தமிழக அரசு வாங்கும் கரும்புகளை இடைத்தரகர்கள் மூலம் வாங்குவதால், கரும்பு விவசாயிகளுக்கும், அரசுக்கும் தான் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசு, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரிடையாக கரும்பு விவசாயிகளிடம் கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.