தஞ்சாவூர் மாநகராட்சி சீனிவாசபுரம் மற்றும் தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா, ஒமைக்ரான் பெருந்தொற்று கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் ஆய்வு விட்டு பேசுகையில், கொரோனா ஒமைக்ரான் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில்,தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 294 படுக்கைகளும், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 500 படுக்கைகளும், இதர அரசு மருத்துவமனையில் 181 படுக்கைகளும், தனியார் மருத்துவமனையில் 1146 படுக்கைகளும், வல்லம் கொரோனா சிகிச்சை மையத்தில் 704 படுக்கைகளும், பட்டுக்கோட்டைகொரோனா சிகிச்சை மையத்தில் 480 படுக்கைகளும் மற்றும் கும்பகோணம் கொரோனா சிகிச்சை மையத்தில் 300 படுக்கைகளும், தனியார் கொரோனா சிகிச்சை மையத்தில் 480 படுக்கைகளும், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 210 படுக்கைகளும் என மொத்தம் 4474 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது.
இதில் ஆக்சிஜனுடன் கூடிய 1031 படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவில் 284 படுக்கைகளும் அடங்கும். மேலும், நமது மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 435 நபர்களில் 217 நபர்களை தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 17 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்டு கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பிலும், சுகாதாரத்துறை சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தொற்று நோய் குறித்து எந்தவித அச்சமின்றி, அரசு வழிகாட்டு நெறி முறைகளை பின் பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும். கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
பொது மக்கள், கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஒதவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என்றார்.இதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தஞ்சை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 15-18 வயதுடைய ஐ.டி.ஐ மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ரமேஷ் குமார், நகர் நல அலுவலர் நமச்சிவாயம், மருத்துவர் ஆடலரசி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.