கும்பகோணம் நகராட்சி கடந்த 1866 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. கடந்த 16.10.2021 அன்று மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதனால், வார்டுகளின் எண்ணிக்கையும் 45 லிருந்து 48 ஆக உயர்ந்தது. கும்பகோணம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது. கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் கும்பகோணம் நகராட்சியில் தொடர்ந்து திமுக வெற்றி பெற்று வந்த நிலையில், 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் நகர்மன்றத் தலைவர் பதவியை அதிமுக வென்றது. எனவே, மாநகராட்சியின் முதல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக ஈடுபட்டது. திமுக கூட்டணியில் திமுக 39 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு வார்டிலும் போட்டியிட்டது.




இதில் திமுக 37 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா ஒரு வார்டிலும் என திமுக கூட்டணி மொத்தம் 42 வார்டுகளில் கைப்பற்றியது. ஆனால், 47 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக 3 வார்டுகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. தவிர, சுயேச்சை 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை திமுக பிடித்துள்ளது. இப்போது, இந்த முதல் மேயர் பதவியைப் பெற திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது.




திமுகவின் கும்பகோணம் மாநகரச் செயலராக உள்ள சு.ப. தமிழழகன் 26 ஆவது வார்டில் போட்டியிட்டு, தன்னுடன் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை டெப்பாசிட் இழக்க வைத்து வெற்றி பெற்றார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டில் நகர் மன்றத் தலைவராக இருந்தார். இதன் பின்னர் 2011 ஆம் ஆண்டில் நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இவரது தாயார் மதுரம் பத்மநாபன் முன்பு கும்பகோணம் நகர்மன்றத் தலைவராக இருந்தவர். இவரது தந்தை பத்மநாபன் திமுக நகரச் செயலராகப் பதவி வகித்தவர். முதல் மேயர் பதவிக்கு தமிழழகனின் பெயர் பரிசீலனையில் உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, கட்சி பணி மற்றும் கட்சியின் தலைமைக்கும் நெருக்காமகா இருக்கும் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் பதவி சு.ப. தமிழழகனுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.



இதேபோல, 31 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா. அசோக்குமாரும் கும்பகோணத்தின் முதல் மேயர் பதவியைப் பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் திமுகவில் கும்பகோணம் தெற்கு ஒன்றியச் செயலராக உள்ளார். இவர் ஏற்கெனவே தாராசுரம் பேரூராட்சித் தலைவராக இருந்துள்ளார். கும்பகோணம் மாநகராட்சி விரிவாக்கத்தின்போது, தாராசுரம் இணைக்கப்பட்டதால், தற்போது மேயர் பதவிக்கு முயற்சி செய்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி அசோக்குமார் கும்பகோணம் ஒன்றியக் குழுத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். ஏற்கெனவே மனைவி ஒன்றியக் குழுத் தலைவர் இருக்கும்போது, இவருக்கு மேயர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வியும் திமுகவினரிடையே நிலவுகிறது. என்றாலும், மேயர் பதவியைப் பெறுவதற்காக ஆதரவாளர்களையும் திரட்டி வருகிறார்.  கொரோனா தொற்று முதல் அலை முடிந்த போது, ஒன்றியங்களில் செலவு செய்த நிதியில் பல்வேறு குளறுபடிகள் செய்ததால், கட்சியின் தலைமைக்கு தகவல் சென்றதால், இவரிடம் உள்ள ஒன்றியம் பிரிக்கப்பட்டது. தன்னிடம் உள்ள பணம் பலம் மற்றும் சமூக ரீதியாக செல்வாக்கு உள்ளதால், மேயர் பதவிக்கு பல்வேறு வகையில் முயற்சி எடுத்து வருகின்றார் ஆனால், கும்பகோணம் மேயர் பதவி யாருக்கு என்பதைக் கட்சி மேலிடம்தான் முடிவு செய்து விரைவில் அறிவிக்கும் என்கின்றனர் திமுகவினர்.