தஞ்சாவூர்: தமிழகத்தில் தான் அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூரில் விரைவில் மற்றொரு டைடல் நியோ அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். 


டைடல் நியோவில் புதிய நிறுவன தொடக்க விழா


தஞ்சை டைடல் நியோ பூங்காவில் புதிய நிறுவன தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமை வகித்து சாப்ட்வேர் நிறுவனத்தை தொடக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் திருவையாறு துரை சந்திரசேகர், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.




ரூ.30.50 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது


தஞ்சையில் ரூ. 30.50 கோடி மதிப்பில், 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிதாக தஞ்சாவூரில் டைடல் பார்க் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கடந்த மாதம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார். திறந்த 15 நாட்களிலே இந்த டைடல் பூங்காவில் உள்ள அனைத்து அலுவலகங்களும் முழுமையாக நிரம்பியது. முக்கியமாக டெல்டா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்களுக்கு சொந்த ஊரிலேயே சிறந்த ஊதியத்துடன் பணி கிடைத்துள்ளது. இந்நிலையில் நிறுவனங்களின் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:


படித்த இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு


தஞ்சாவூரில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட டைடல் நியோ பார்க்கில் அனைத்து அலுவலகங்களும் நிரம்பிவிட்டன. திறந்த குறுகிய காலத்திலே கம்பெனிகள் அனைத்தும் வந்துவிட்டது. டெல்டா மாவட்ட படித்த இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், தமிழகத்தில் தான் அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மட்டும் தான் பெண்கள் அதிகளவில் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக வேலை வாய்ப்புகளில் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.


செங்கிப்பட்டியில் சிப்காட் பணிகள் துரிதம்


அடுத்ததாக தூத்துக்குடியில் நியோ டைடில் பார்க் திறக்கப்பட உள்ளது. செங்கிப்பட்டியில் சிப்காட் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதில் எந்த தவறும் இல்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகள் வரலாம். தஞ்சாவூர் விமான நிலையம் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.விரைவில் பயன்பாட்டுக்கு வரும். தஞ்சாவூரில் இரண்டாவது டைட்டில் பார்க்  விரைவில் வரும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.