தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அந்தமான் சிறைச்சாலை போன்றே கட்டப்பட்ட சிறைச்சாலையின் இன்றைய நிலை பலரையும் வேதனைக்குள்ளாக்கி உள்ளது. சுதந்திரத்திற்காக அடிபட்டு, மிதிபட்டு, ரத்தம் சிந்திய கணங்கள், கதைகள் என அடுத்த தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் இதுபோன்ற வரலாற்று நினைவுச் சின்னங்களை போற்றி பாதுகாக்க வேண்டும் அல்லவா?
ஆபத்தான சிறைச்சாலை... அந்தமான் சிறைச்சாலை
இந்தியாவிலேயே ஆபத்தான சிறைச்சாலையாக அறியப்படுகிறது அந்தமான் நிக்கோபரில் உள்ள செல்லுலார் சிறை. இது காலா பானி சிறைச்சாலை என்றும் அறியப்படுகிறது. போர்ட் ப்லைர் பகுதியில் உள்ள இது மிகவும் மோசமான சிறைச்சாலையாக பிரிட்டிஷ் அரசாங்க காலத்தில் இருந்தது.
இந்த சிறைக்கு வரும் கைதிகள் மிகக் கடுமையாக நடத்தப்பட்டனர். மிகக் குறைந்த வசதிகளே இங்கு இருந்தது. கைதிகளுக்கு மிகக் கொடிய சித்தரவதைகள் நடைபெற்றன. நோய்கள் தாக்கின. ஆங்கிலேயே அரசால் மிக மோசமாக நடத்தப்பட்டனர். இந்த தண்டனைகளை அனுபவித்தவர்களில் பெரும்பாலும் விடுதலைப் போராட்ட வீரர்கள்தான் அடங்குவர் என்பது தான் காலத்தினால் சகித்துக்கொள்ள முடியாத உண்மை.
வதை முகாம் என்று அழைக்கப்பட்டது
அந்தமானை ஒரு சிறைச்சாலை என்பதை விட வதை முகாம் என்றே கூறலாம். இங்கு இருந்து நோய்கள் தாக்கியும் மனநல பிரச்னைகள் ஏற்பட்டும் இறந்து போகாமல் இருந்தவர்கள், தண்டனைக்காலம் முடிந்து மீண்டும் இந்தியா சென்று சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்தவர்கள் மிகக் குறைவே. ஏனெனில் அவமானப்படுத்துதல் மூலம் போராளிகளின் மன உறுதியைத் தகர்ப்பதுதான் அந்த சிறைச்சாலையின் முதன்மை நோக்கம். ஆனால் அதையும் தாண்டி சுதந்திர போராட்ட வீரர்கள் வெற்றி நடை போட்டனர்.
பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதிதீவிரமான போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை நாடு கடத்துவது அல்லது அந்தமான் சிறையில் அடைப்பது வழக்கமாக இருந்தது. இதுதவிர, அந்தந்த பகுதியிலுள்ள சிறைச்சாலைகளைக் கட்டியும் அடைக்கப்பட்டனர்.
தஞ்சாவூரில் கட்டப்பட்ட “அந்தமான் சிறைச்சாலை”
இதற்காக தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர், திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் 1885-ம் ஆண்டு சிறைச்சாலைகள் கட்டப்பட்டன. இதில், தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே 52 ஏக்கர் பரப்பளவில் ஒரு சிறைச்சாலை கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. அந்தமான் சிறைச்சாலை போன்று காணப்படும் இச்சிறையில் சுதந்திரத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டனர்.
இச்சிறைச்சாலை சூரிய கதிர்கள் விரிவடைவது போன்று எட்டு நிலைகளாக கட்டப்பட்டது. ஒவ்வொரு நிலையிலும் 32 தனித்தனி சிறை அறைகள் உள்ளன. நடுவில் கண்காணிப்பு கோபுரம் உள்ளது. இக்கோபுரத்தில் இருந்து சூரிய கதிர்களைப் போல 8 வளாகங்கள் உள்ளன. அவ்வப்போது இச்சிறைச்சாலை விரிவுபடுத்தப்பட்டு வந்தன. சிறைச்சாலையின் நுழைவுவாயில் அருகே 1905ம் ஆண்டு தரைதளம் மற்றும் முதல்தளங்களில் தலா 10 அறைகள் கொண்ட சிறைச்சாலைகளும் கட்டப்பட்டன. அதன் நேர் எதிரே தலா 5 அறைகள் கொண்ட கட்டடங்களும் கட்டப்பட்டன.
20 அடி உயரம் 2 அடி அகல சுற்றுச்சுவர்
சிறைச்சாலையைச் சுற்றிலும் 20 அடி உயரமும், 2 அடி அகலத்திலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. செங்கல், கருங்கல்லில் கட்டப்பட்ட இச்சிறைச்சாலையில் ஒவ்வொரு அறையும் 8 அடி அகலமும், 15 அடி நீளமும் கொண்டுள்ளது. அறையின் முகப்பில் 2 அடி அகலம், 7 அடி உயரத்தில் உள்ளே செல்ல இரும்பு கம்பிகளுடன் கூடிய கதவுகள், பின்புறத்தில் ஜன்னல், அதே அறையில் கழிவறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
மூதறிஞர் ராஜாஜி அடைக்கப்பட்ட சிறைச்சாலை
அக்காலத்தில் தஞ்சாவூர் பகுதியில் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள் இச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். இவர்களில் உயிரிழந்தவர்களும் ஏராளம். அதனால்தான் இந்த சிறைச்சாலை தஞ்சாவூரின் அந்தமான் சிறைச்சாலை என்று அழைக்கப்பட்டது. உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து இச்சிறையில்தான் அடைத்தனர். மூதறிஞர் ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டபோது வேதாரண்யத்துக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு, இச்சிறையில்தான் அடைக்கப்பட்டார். அதனால், அவரது நினைவாக இவ்வளாகத்தில் ராஜாஜி அரசு நடுநிலைப்பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தச் சிறைச்சாலை, நாடு சுதந்திரமடைந்த பிறகு பாஸ்டல் பள்ளியாகவும், அதன் பின்னர் சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளியாகவும் மாற்றப்பட்டது. தற்போது, சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இதில், குற்றச் செயல்களில் ஈடுபட்டு, தண்டனை பெறும் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் அடைக்கப்படுகின்றனர். மேலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்குமிடமாகவும் தனியாகச் செயல்பட்டு வருகிறது.
சிதிலமடைந்து வரும் வரலாற்று பொக்கிஷம்
இச்சிறைச்சாலையில் உள்ள அறைகள் அனைத்தும் புதர்கள் அடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன சுதந்திர தினம் கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் இந்தப் பழமையான சிறைச்சாலையை அதன் தன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இச்சிறைச்சாலையைச் சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகளைப் போற்றும் வகையிலும், அவர்களை வருங்கால தலைமுறையினருக்கு நினைவுகூரும் விதமாகவும் புதுப்பித்து பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.