தஞ்சாவூர்: தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தேசியக் கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.


நாடு முழுவதும் இன்று 77 -வது சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மூவர்ணத்தில் பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் ஆகியோர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.

முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் கவுரவித்தார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பல்வேறு திட்ட பணியில் சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்த 125 பேருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

போர், போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடாந்திர குடும்ப பராமரிப்பு மானியம் 15 பேருக்கு ரூ.3 லட்சம்,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மின்கல இயங்கு வாகனம் ரூ.4.24 லட்சம் மதிப்பில் 4 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு பெறும் பயனாளிகள் 4 பேருக்கு ரூ.40 ஆயிரம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ.4.11 லட்சம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கும், தாட்கோ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ. 1.01 கோடி மதிப்பில் 57 பயனாளிகளுக்கும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். இதன்படி மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.




இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்புற பாடல், கிராமிய நடனம், நம்ம ஊரு தஞ்சாவூர் கிராமிய பாடல், பரதம் மற்றும் கிராமிய பாடல், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தஞ்சை அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா செ.வேலுசாமி தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் இப்பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாமாண்டு பயிலும் மாணவர் எஸ்.கோபிநாத் அவர்கள் ஏர்.ஆர்.ரகுமானின் "வந்தே மாதரம்" பாடலை நாதஸ்வரம் மூலம் இசைத்தார்.

பல்கலைக்கழக பல்கலைக்கழக பதிவாளர் பி.கே. ஸ்ரீவித்யா, முதன்மையர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பல்கலைக்கழக தேசிய மாணவர் படையின் லெப்டினெட் விஜயலெட்சுமி, கேப்டன் உ. சரவணக்குமார், இந்திய விமான படை பிரிவின் பிளையிங் ஆபிசர் வி.பாண்டியராஜ் மற்றும் விளையாட்டுதுறை தலைவர் பேரா ரமேஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலும் நாட்டுநலப்பணித்திட்ட மூலம் 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.