தஞ்சாவூர்: தஞ்சாவூர், கும்பகோணத்தில் இருவேறு சம்பவங்களில் சிறுமிகளுக்கு நடந்த பாலியல் பிரச்னையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த உறவுக்கார சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் பி.பிரதீப்கண்ணன் (24). கூலித் தொழிலாளி. இவர் தஞ்சை அருகே நடந்த ஒரு கோயில் விழாவிற்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அதேபோல் தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியும் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். சிறுமியும், பிரதீப் கண்ணனும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பிரதீப் கண்ணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் வல்லம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் பிரதீப்கண்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த சிறுமியை பிரதீப்கண்ணன் பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதீப் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
கும்பகோணத்தில் சிறுமிக்கு நேர்ந்த அதிர்ச்சி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் 36 வயது கூலி தொழிலாளி. இவரது மனைவியை பிரசவத்திற்காக, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்.
இந்நிலையில் இந்த தம்பதிக்கு நேற்றுமுன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இதனால், மனைவிக்கு துணையாக தனது தம்பி மனைவியையும், அவரது ஆறு வயது மகளையும் அழைத்து வந்துள்ளார். ஆனால், பிரசவ வார்டில், ஒருவர் மட்டுமே தங்க முடியும் என்பதால், அந்த கூலித் தொழிலாளி தம்பி மனைவியை, அந்த வார்டில் தங்க வைத்துள்ளார்.
தொழிலாளியும், அவரது தம்பியின் ஆறு வயது மகளும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு கூடத்தில் இரவு துாங்கியுள்ளனர். அப்போது, இரவில் சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அழுதுக்கொண்டே, தனது பெரியப்பாவை எழுப்பி நடந்ததை கூறியுள்ளார்.
பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த இளைஞரை பிடித்து கிழக்கு போலீசில் அந்த கூலி தொழிலாளி ஒப்படைத்துள்ளார். பிறகு, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடத்திய விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்தவர் திருவாரூர் மாவட்டம் புங்கன்சேரி பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் தினேஷ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.