தஞ்சாவூர்: ஒரு மாதம் அல்ல இரு மாதம் அல்ல ஏறத்தாழ 7 மாதங்களாக தமிழக அரசு வழங்கும் கரும்புக்கான ஊக்கத்தொகை இன்று வரும் நாளை கிடைக்கும் என்று விவசாயிகள் வேதனையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தீபாவளி நேரத்திலாவது தருவீங்களா என்று கோரிக்கையும்
விடுத்துள்ளனர்.
போராட்டங்கள் நடத்தியும் பிரயோஜனம் இல்லையே
கரும்புக்கு கட்டுப்படியான விலையாக டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை மீது கோரிக்கை விடுத்து, போராட்டங்களும் நடத்தி பார்த்து விட்டனர். ஆனால், மத்திய அரசின் நியாயமான, லாபகரமான விலை டன்னுக்கு ரூ. 2,919 வீதம் மட்டுமே வழங்கப்படுகிறது.
மத்திய அரசு விலையுடன் வழங்கப்பட்டு வந்த மாநில அரசின் பரிந்துரை விலையும் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கு பதிலாக சிறப்பு ஊக்கத்தொகை என்ற பெயரில் மிகக் குறைந்த அளவில் தமிழக அரசு 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. சரி அதாவது உரிய காலத்தில் கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. கரும்பு இனிக்கும் என்றால் இந்த ஊக்கத் தொகை பெறுவதற்குள் விவசாயிகளின் வாழ்க்கை கசந்துதான் போகிறது.
ஊக்கத்தொகை வழங்குவதிலும் இத்தனை மாதமா?
இந்த ஊக்கத்தொகையும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டாலும், 6 மாதங்கள் கழித்துதான் அதற்கான அரசாணையே பிறப்பிக்கப்படுகிறது. இதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து மொத்தத்தில் 8 மாதங்களுக்கு பிறகுதான் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கரும்பு நீண்ட கால பயிர் என்பதால் இப்படி செய்கிறீர்களா என்றும் விவசாயிகள் வேதனையுடன் கேட்கின்றனர். இப்படி கிடைக்கும் ஊக்கத்தொகையால் எந்தப் பயனும் இல்லை என்ற அதிருப்தி கரும்பு விவசாயிகளிடையே நிலவுகிறது.
கடந்த 2023 - 24 ஆம் ஆண்டுக்கான (அக்டோபர் 1 முதல் செப்டம்பர் 30) தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ. 215 வழங்கப்படும் என்ற அறிவிப்பு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின்போது வெளியிடப்பட்டது. ஆனால், 7 மாதங்கள் கடந்தும் இன்னும் விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்கவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
விவசாயிகளின் வேதனை தமிழக அரசுக்கு எட்டுமா?
இது குறித்து கரும்பு விவசாயிகள் சங்கச் செயலர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் கூறியதாவது:
ஆலைக்கு கரும்பு கொடுத்த சில நாள்களில், மத்திய அரசு அறிவித்த விலை பட்டுவாடா செய்யப்பட்டு விடுகிறது. ஆனால், மாநில அரசு அறிவிக்கும் சிறப்பு ஊக்கத்தொகை ஆண்டுதோறும் கால தாமதமாகிறது. இந்த சிறப்பு ஊக்கத்தொகை மூலம் விவசாயிகளுக்கு குறைந்தது ரூ. 10 ஆயிரம், அதிகபட்சமாக ரூ. 1 லட்சம், ரூ. 1.50 லட்சம் வரை கிடைக்கும்.
இதை மத்திய அரசு வழங்கும் விலையுடன் சேர்த்து வழங்கினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகள் வாங்கிய கடனை உடனடியாக திருப்பிச் செலுத்துவதற்கும் வசதியாக இருக்கும். மேலும், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம், வாகனக் கட்டணம் உள்ளிட்டவற்றை உரிய காலத்தில் செலுத்துவதற்கு வாய்ப்பாக அமையும்.
காலதாமதமாக கொடுத்தால் வேதனையே மிஞ்சுகிறது
ஆனால், இத்தொகை மிக கால தாமதமாக பொங்கல் பண்டிகையின் போதுதான் வழங்கப்படுவதால், வாங்கிய கடனுக்கு வட்டித்தொகையும் அதிகமாகிவிடுகிறது. கல்விக் கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்த முடியாததால் பிள்ளைகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
எனவே, கரும்புக்கான தொகையை பட்டுவாடா செய்யும்போது, மத்திய அரசு விலையுடன் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்கினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கான அனுமதியை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
நடப்பாண்டு 7 மாதங்களாக நிலுவையில் உள்ள சிறப்பு ஊக்கத்தொகையை தீபாவளி பண்டிகைக்குள்ளாவது வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் விவசாயிகள் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். எனவே, அதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கோம். இந்த தீபாவளியாவது கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பாக அமைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கரும்பு சாகுபடி பரப்பளவும் குறைகிறது
விவசாயிகள் எதிர்பார்க்கும் நியாயமான விலை கிடைக்காததால் தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பளவும் குறைந்து வருகிறது. தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் மட்டுமே முன்னொரு காலத்தில் 6 லட்சம் டன் அரைவை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு 1.90 லட்சம் மட்டுமே அரவை செய்யப்பட்டது. இந்த நிலைமை தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் நிலவுகிறது.
இந்நிலையில், மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதில் நிலவும் கால தாமதம் காரணமாக கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளும் நம்பிக்கையை இழப்பதால், படிப்படியாக மாற்று சாகுபடிக்குச் செல்கின்றனர். இதனால், கரும்பு சாகுபடி பரப்பளவு மேலும் குறையும் என்ற அச்சமும் நிலவுகிறது.