மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். நூலகத்தை தஞ்சாவூர் எம்.பி., பழநிமாணிக்கம் திறந்து வைத்து பேசியதாவது:


முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவினை வளர்க்கவும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அடையும் பொருட்டு தமிழகம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபிரனர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் கீழ் இயங்கும் 259 கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

விடுதி ஒன்றுக்கு தலா ரூ. 1 லட்சம் செலவில் இந்த நூலககங்கள் 250 எண்ணிக்கையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் ரூ.1 லட்சத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் புத்தகங்களையும் ரூ.50,000 மதிப்பில் தளவாட பொருட்கள் வாங்கி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரயினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள 18 கல்லூரி விடுதிகளில் ரூ. 18 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் திறக்கப்படுகிறது.


இந்த நூலகத்தில் ஆங்கில அறிவை வளர்க்கும் புத்தகங்கள், உலகளாவிய தலைவர்கள் குறித்த புத்தகங்கள், தொழில் மற்றும் திறன் வளர்ச்சி சார்ந்த புத்தகங்கள், பொது அறிவு சார்ந்த புத்தகங்கள், மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் புத்தகங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளது.

கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே வாசிப்புத்திறனை மேம்படுத்திடவும் அதேபோல் புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகாதேவி, விடுதி காப்பாளர் தெய்வநாயகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாணவிகள் தரப்பில் கூறுகையில், விடுதியிலேயே செம்மொழி நூலகத்தை திறக்க ஏற்பாடு செய்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். விடுதியில் உள்ள நேரங்களில் படிப்புக்கு தேவையான குறிப்புகளை எடுக்கும் வகையில் இந்த நூலகம் அமைந்துள்ளது. பொது அறிவு, பாடங்கள் குறித்த புத்தகங்கள், தொழில் வளர்ச்சி என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளது. இதனால் தேர்வு உட்பட பலவகையில் பயன் பெற ஏதுவாக உள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.