இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவரவர் வீட்டில் விநாயகரை வைத்து வழிபடலாம், ஊர்வலம் செல்வதற்கு அனுமதி கிடையாது. மேலும் காவல்துறை அனுமதி இன்றி விநாயகர் ஊர்வலம் நடத்தினால் விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டு ஊர்வலம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதனால் விநாயகர் ஊர்வல பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் விநாயகர் ஊர்வலங்களுக்கு தடை விதித்த அரசு ஒருசில நிபந்தனைகளோடு வழிபாடு நடத்த அனுமதித்து விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதி நீர்நிலைகளில் கரைத்துக் கொள்ளவும் அனுமதித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் வரும் 15 ஆம் தேதி தடையை மீறி நடைபெறும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த முத்துப்பேட்டை ஊர்வலம் குறித்த சிறப்புக்கூட்டம் நேற்று முன்தினம் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் எடுத்த முடிவின்படி 15 ஆம் தேதி நடைபெற இருந்த ஊர்வலம் இன்று அரசின் வழி காட்டுதலோடு நடக்க உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர். அதன்படி இன்று மாலை ஊர்வலம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டு நேற்று முத்துப்பேட்டையில் திருச்சி ஐஜி பாலகிருஷ்ணன், தஞ்சை டிஐஜி பிரவேஷ் குமார், திருவாரூர் எஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வருண், வஜ்ரா உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து பிரிவு போலீசாரும் இங்கு முகாமிட்டு பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டாடா ஏஸ் வாகனத்தில் எடுத்துச்சென்று விநாயகர் சிலைகளை நீர்ந்நிலைகளில் கரைக்கலாம் என முன்னதாக அனுமதித்திருந்த அதிகாரிகள் இப்போது இருசக்கர வாகனத்தில் பைக்கில் எடுத்துச்செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விழா ஏற்பாட்டாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இன்று விநாயகர் ஊர்வலம் நடைபெறுமா? நடைபெறதா? என்ற சந்தேகமும் ஏற்ப்பட்டுள்ளது. இருந்தாலும் போலீசார் தரப்பில் இன்று விநாயகர் எடுத்து சென்று கரைக்கும்படி ஊர்வல விழா கமிட்டியாளர்களிடம் வலியுறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் முத்துப்பேட்டையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக முத்துப்பேட்டை பகுதியில் ஆண்டுதோறும் விநாயகர் ஊர்வலம் என்பது வெகு விமர்சையாக நடைபெறும். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள், 8 மாவட்டங்களில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்றின் காரணமாக ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருப்பதால் திருவிழா போல் கொண்டாடும் நிகழ்வு இந்த ஆண்டு இல்லாமல் போயிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.