உலக சுகாதார அமைப்பு கொரோனாவை பெருந்தொற்றுநோயாக கடந்த 2019 ஆண்டு அறிவித்தது. வைரஸ் முதல்முதலாக தாக்கிய காலகட்டத்தில் காணப்பட்ட அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் இருமல். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பலர் வாசனை அல்லது சுவை உணர்வை அல்லது இரண்டையுமே இழப்பதைக் கவனித்தனர். மேலும், தொண்டை வலி, தலைவலி, வலிகள் மற்றும் நோவு, வயிற்றுப்போக்கு, தோலில் வெடிப்பு, கைவிரல்கள் அல்லது கால்விரல்களின் நிறமாற்றம், சிவப்பு அல்லது எரிச்சல் மிகுந்த கண்கள், மிகவும் நோய்வாய்ப்பட்டவர்கள், சுவாசிப்பதில் சிரமம், பேச்சு இழப்பு, மார்பு வலி ஆகியவை அடங்கும்.


மக்கள் தும்மும் போது அல்லது இருமும் போது வெளிவரும் திரவத்துளிகள், காற்றில் நீடிப்பதை விட மேற்பரப்பில் விழுந்து அதன் மூலம் பரவுவதாக அறிவித்தனர். அதனால் கை கழுவுதல், முககவசம் அணிந்தல் ஆகியவை முக்கிய தடுப்பு நடவடிக்கையாகும். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்படாதவாறு பாதுகாத்து கொள்ள வேண்டும், அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவவேண்டும், வெளியில் சென்றால், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறித்தி வருகின்றது.




தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை நடைபெற்ற 7 முகாம்களில் முதல் தவணையாக 12,83,441 பேரும், இரண்டாவது தவணையாக 4,71,866 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 4ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான சில்லரை, தரைகடை வியாபாரிகள், தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்காக கடைகளை அமைத்துள்ளனர். இதில், ஏராளமானோர் பீகார், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்தும், மதுரை, கோயம்புத்துார், திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.


அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் வியாபாரம் செய்யும் இடத்திற்கு சென்று அவர்களை கண்டறிந்து, தடுப்பூசி போட்டுள்ளார்களா என்று விசாரித்து, உடனடியாக தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மேலும், தடுப்பூசி போட்டுள்ளேன் என்றால், அவர்களுடைய ஆதார் எண்ணை, பதிவு செய்து, தடுப்பூசி போட்டுள்ளார்களா என்று ஆய்வு செய்யப்பட்டு, போடாவிட்டால், உடனடியாக தடுப்பூசி போடப்படுகின்றது. வெளி மாநில, மாவட்டத்திலிருந்து வியாபாரத்திற்காக வந்துள்ளவர்களின் அனைவரது ஆதார் அட்டை எண்ணை வாங்கி, உரிய விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாநில, மாவட்டத்திலிருந்து வியாபாரிகள் குவிந்து வருவதால், அவர்களிடமிருந்து கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக, கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமிற்கு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், முன்னாள் நகர் மன்ற தலைவர் தமிழழகன், பெருமாண்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், நகர் நல அலுவலர்கள் நமச்சிவாயம், பிரேமா  சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் மற்றும்  துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றார். செல்லும் இடங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து அறிவுறுத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான வெளி மாநில, மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வியாபாரத்திற்காக வந்துள்ளதால், அவர்களால், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என சுகாதாரத்துறையினர், தீவிரப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் வெளி மாநில, மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால், அனைத்து பொது மக்களும், உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என  நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துள்ளனர்.