தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் இன்று மாலை அவரது சொந்த மாவட்டமான திருவாரூர் வருகிறார். கொரோனா ஊரடங்கு பின்னர் முதல்முறையாக திருவாரூர் மாவட்டம் வரும் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் திமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி வரை விமானம் மூலமாக வருகிறார். அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக திருவாரூர் வருகிறார் இன்று மாலை 6 மணியளவில் திருவாரூர் அடுத்த காட்டூரில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அதனை தொடர்ந்து அதே பகுதியில் அமையவுள்ள கலைஞர் அருங்காட்சியம் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
அதன் பின்னர் அரசினர் விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வு எடுக்கிறார், அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நாளை காலை 10 மணியளவில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனி சிகிச்சை பிரிவின் வளாகத்தினை திறந்து வைத்து ஆய்வு செய்கிறார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கும் மு.க ஸ்டாலின் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்நிலையில் திருவாரூர் வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாதுகாப்பு காரணங்களை ஒட்டியும், ஏற்கனெவே மத்திய அரசு அறிவித்துள்ள மத்திய உளவுத்துறை அறிக்கையின்படி தமிழகத்தில் ட்ரோன் கேமரா எனப்படும் பறக்கும் கேமராக்கள் மூலமாக தமிழகத்தில் உள்ள பிரபலங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்னும் எச்சரிக்கை அளிக்கப்பட்டிருப்பதாலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் திருவாரூர் வருகை தரும் நாளான இன்று ஆறாம் தேதி மற்றும் நாளை 7-ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களும் திருவாரூர் மாவட்டத்தில் ட்ரோன் கேமராக்கள், அதாவது பறக்கும் கேமராக்கள் செயல்படவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.