மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கூழையார் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறையின் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் அகியோர் தலைமையில் ஆமைக்கு குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.




அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி பசிபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வசிக்கும், இவ்வகை ஆமையானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரை பகுதிக்கு வரும் கடற்கரை பகுதிக்கு வரும் ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 150 முதல் 180 முட்டைகள் வரை இடும், இவ்வாறு கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்படுகின்றன.




இதில் இந்தாண்டு மயிலாடுதுறை மாவட்ட  கடல் பகுதியில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் இட்ட சுமார் 32 ஆயிரம் முட்டைகள்  பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று குஞ்சுகளும் முட்டையில் இருந்து பொறித்து வெளிவந்தது, அரியவகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகள்  சுமார் 4000-க்கும் மேற்பட்ட குஞ்சுகளை நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆகியோர் இணைந்து கூழையார்  கடலில் விட்டனர்.  இவ்வாறு விடப்பட்ட இந்த ஆலிவ் ரெட்லி ஆமைக்குஞ்சுகள் கடலில் விட்ட  நாளிலிருந்து மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து இனப்பெருக்கத்திற்காக மீண்டும் தமிழக கடற் பகுதிக்கு வரும் என்று வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா தெரிவித்தார். இந்நிகழ்வில் சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், வனத்துறையினர், காவல் துறை மற்றும் அப்பகுதி மீனவர்கள் கலந்துகொண்டனர்.




இந்நிலையில் அப்பகுதி சமுக ஆர்வலர்கள் கூறுகையில், ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டைகளை இரவு 11 மணிக்கு மேல்  தொடங்கி அதிகாலை 5 மணி வரை இரவு நேரங்களில் மட்டுமே சேகரிக்க முடியும், ஆனால் மயிலாடுதுறை கடலோரப் பகுதிகளில் வனத்துறையினர் இரவு நேரங்களில் அவ்வாறு சென்று சரியான முறையில் முட்டைகள் சேமிக்கப்படுவதில்லை என்றும், வெறும் கணக்கு காட்டும் செயலில் தான் இவர்கள் ஈடுபடுவதாகவும், பெரும்பாலும் மீனவர்கள் தான் அதிக அளவில் முட்டைகளை சேகரித்து இவர்களிடம் தருவதாகவும் தெரிவித்தனர்.


மேலும் வனத்துறையினரின் அலட்சியத்தால்  ஆமை குஞ்சு முட்டைகள் நாய், நரி மற்றும் ஒரு சில மனிதர்களால் சூறையாடப்படுவதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வரும் காலங்களிலாவது வனத்துறையினர் இரவு நேரங்களில் சரியான முறையில் கடற்கரை பகுதிகளில் ரோந்து சென்று அழிந்து வரும் ஆமை இனமான ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை சேகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்