2022 - 2023 ஆம் ஆண்டிற்கான கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கை  மார்ச் 4 ம் தேதி கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதிநிலை அறிக்கையில், பக்கம் 23, பத்தி 75-ன ல், மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதியை பெற்று மேகதாது அணை மற்றும் பெங்களூரு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.  இதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.




இந்நிலையில் கர்நாடக பாஜக அரசுக்கு மறைமுக மத்திய அரசு ஆதரவை அளித்து வருவதாக கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றி கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



Crime : தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் மயிலாடுதுறையில் கைது..


 


மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், காவிரி நதிநீர்ப் பங்கீடு என்பது தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒன்று. இதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், நான்கு மாநிலங்களின் குடிநீர்த் தேவை, பாசனத் தேவை ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான நீரின் அளவை நிர்ணயித்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி 192 டிஎம்சி அளவு நீரை கர்நாடகம், தமிழகத்துக்குத் தரவேண்டும். ஆனால், உரிய நீர் தரப்படவில்லை. உபரி நீர் தான் கிடைத்தது.




இதனைத் தொடர்ந்து, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தரவேண்டிய நீர்ப் பங்கீட்டின் அளவை 177.25 டிஎம்சி அடியாக குறைத்தது. இவ்வாறு குறைக்கப்பட்டதற்கு பெங்களூர் குடிநீர்த் தேவையும் ஒரு காரணமாகும். மீண்டும் அதே காரணத்தைக் காட்டி, மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது என்பது நியாயமற்றது என்றனர்.


Srilanka Economic Crisis: இலங்கைக்கு 7500 கோடி ரூபாய் கடனுதவி வழங்கிய இந்தியா..