திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகை முழுவதையும் வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் 10-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்போது தொடர் போராட்டம் நடத்தும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டம் தடையை மீறி நடந்ததாக கூறி 10 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.


திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் உள்ளது திரு ஆரூரான் சர்க்கரை ஆலை. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆலை முன்பு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 30-ந் தேதி முதல் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் 2 நாட்களுக்கு முன்பு கரும்பு விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் 10-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




திமுக செயல்வீரர்கள் கூட்டம்

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர ஒன்றிய, பேரூர், பகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் வரும் 19ம் தேதி பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமை வகித்தார். இதில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ., துரை. சந்திரசேகர், எம்.பி.,, பழனிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரும் 19ம் தேதி பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, வாக்குச்சாவடி முகவர் பட்டியல் வழங்க நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் தஞ்சை மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், து.செல்வம், மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமாறன், புண்ணிய மூர்த்தி, கனகவள்ளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.