சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மனைவி இறந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கணவரும் உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் கிராம் அக்ரகார தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி நரசிம்மன். 88 வயதான இவர் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி கடந்த 1995 ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள அனுமான் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் இவரின் 80 வயதான மனைவி சீதாவும், லட்சுமி நரசிம்மனும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடனும், அதீத பாசத்துடனும் இருந்து வந்துள்ளனர். திருமணமான நாள் முதல் இருவருக்கும் இடையே சண்டை , சச்சரவுகள் ஏதும் வந்தது கிடையாது என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு ருக்குமணி, லலிதா, ரமா, பாமா என்ற நான்கு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். மேலும் பிரசன்னா (33) குரு (30) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக லட்சுமி நரசிம்மன் மற்றும் அவரது மனைவி சீதா ஆகிய இருவரும் உடல் நிலை குன்றி இருந்துள்ளனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக சரியான முறையில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் செய்யமுடியாத சூழலில் நேற்று படுக்கையில் இருந்த லட்சுமி நரசிம்மனின் மனைவி சீதாவின் உயிர் எதிர்பாராத விதமாக பிரிந்தது. வீட்டினுள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த லட்சுமி நரசிம்மனிடம் இந்த தகவலை குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், ‛அப்படியா...’ என,கேட்ட மாத்திரத்தில் நாற்காலியில் அமர்ந்தபடியே அவரும் இறந்தார்.
இல்லற வாழ்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலக பொதுமறை திருக்குறளில் திருவள்ளுவர் விளக்கி உள்ளார். இருந்தும், தற்போதைய நவநாகரீக உலகில் திருமணமாகி சில நாட்களிலேயே கணவன் மனைவிகளுக்கு இடையே பல்வேறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விவாகரத்து தேடி நீதிமன்ற வாயிலில் காத்திருக்கும் ஏராளமான தம்பதிகளுக்கு கணவன்,மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மறைந்த இந்த தம்பதிகள் ஒர் எடுத்துக்காட்டு. ஒன்றாய் இணைந்து வாழ்ந்தவர்கள், இறப்பிலும் ஒன்றாய் இணைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரஸ்பரம் அன்பை பரிமாறிக்கொண்ட அந்த ஆத்மாக்கள், இனி இளைப்பாறட்டும் அன்பு என்கிற அஸ்தமனத்தில். இரு உள்ளங்களின் அன்பு பரிமாற்றம் நடந்த அந்த வீடு, இனி அவர்களின் நினைவுகளை மட்டுமே சுமந்து நிற்கும்.