தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வெவ்வேறு இடங்களில் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே விளார் ரோடு பாப்பா நகர், 2ம் தெருவை சேர்ந்தவர் கரிகாலன். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்று விட்டார். இவரது மனைவி பிரியங்கா (30). கர்ப்பமாக உள்ளார். இவரது சித்தி வீடு பாத்திமாநகரில் உள்ளது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி காலை பிரியங்கா கர்ப்பமாக இருப்பதால் அவரது சித்தி தனது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.
பின்னர் நேற்று 21ம் தேதி மதியம் பிரியங்கா தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 13 பவுன் தங்க நகைகள் மற்றும் முக்கால் கிலோ வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரியங்கா தஞ்சாவூர் தாலுகா போலீசிற்கு தகவல் அளித்தார். இதன்பேரில் சம்பவ இடத்தை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருட்டு சம்பவம் நடந்த வீட்டின் பக்கத்து வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் நகைகள் திருட்டு
தஞ்சாவூர் மாவட்டம் காட்டுக்குறிச்சி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூட்டுக்களை உடைத்து தாலி, பொட்டு உட்பட 31 கிராம் தங்கநகைகள், வெள்ளி திருவாட்சி ஆகியவற்றை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் காட்டுக்குறிச்சியில் அமைந்துள்ளது அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில். இக்கோயில் பூசாரியாக காட்டுக்குறிச்சி சிவன்கோயில் தெருவை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மகன் ஸ்ரீதேவ் (25) பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 20ம் தேதி இரவு 7 மணி அளவில் வழக்கம் போல் கோயில் கதவுகளை பூட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
மறுநாள் 21ம் தேதி காலை கோயிலுக்கு வந்தபோது பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் சிலையில் இருந்த தாலி, குண்டு, பொட்டு, காசுஎன மொத்தம். 31 கிராம் தங்க நகைகள், பீடம், வெள்ளி திருவாச்சி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
உடன் இதுகுறித்து ஸ்ரீதேவ் தஞ்சாவூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.