நாளை தீபாவளி! களைகட்டும் கடைத்தெரு! தஞ்சையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

தீபாவளியை முன்னிட்டு தஞ்சை காந்திஜி சாலையில்  பொதுமக்கள் கூட்டம் களைகட்டியது. நாளை தீபாவளி என்பதால் இன்று அதிகளவில் மக்கள் கடைத்தெருவில் கூடினர்.

Continues below advertisement

தஞ்சாவூர்: தீபாவளியை முன்னிட்டு தஞ்சை காந்திஜி சாலையில்  பொதுமக்கள் கூட்டம் களைகட்டியது. நாளை தீபாவளி என்பதால் இன்று அதிகளவில் மக்கள் கடைத்தெருவில் கூடினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Continues below advertisement

இந்துக்களின் பண்டிகைகளில் தீபாவளி முக்கியமான பண்டிகை ஆகும். தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்பு, புத்தாடை, பலகாரம் தான் நினைவுக்கு வரும். தீபாவளி பண்டிகை அன்று அதிகாலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பலகாரங்களை கொடுத்து மகிழ்வர்.

அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே கடைவீதிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி விடும். புத்தாடைகள் வாங்குவதற்காக மக்கள் கிராமங்களில் இருந்தும் நகரங்களை நோக்கி படையெடுப்பர்.


அதன்படி தஞ்சை மாநகரிலும் தீபாவளி பண்டிகையையொட்டி காந்திஜி சாலை ஓரத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. இந்த கடைகள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து கடைகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடைகள் அகற்றப்பட்டன.

அதன் பின்னர் வியாபாரிகள் ஆங்காங்கே சாலையோரங்களில் கொளுத்தும் வெயில் மற்றும் மழையை பொருட்படுத்தாது கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் இன்று கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கிராமப்புறங்களில் இருந்து வந்த மக்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. காரணம் குறுவை சாகுபடி செய்யாத நிலையில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடம் பணப்புழக்கம் குறைந்தது. இந்நிலையில் நாளை தீபாவளியை ஒட்டி கிராமப்புறங்களில் இருந்த வந்த மக்களின் கூட்டத்தால் காந்திஜி சாலை திணறியது என்றுதான் கூற வேண்டும். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. அவர்கள் தங்களின் வாகனங்களை ஆற்றுப்பாலம் பகுதியில் நிறுத்திவிட்டு நடந்து சென்று ஆடைகள் வாங்க சென்றனர். இதனால் பழைய கோர்ட் ரோடு, பெரிய கோயில் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

மேலும் இன்று இரவு இன்னும் அதிகளவில் மக்கள் வருவார்கள் என்ற வியாபாரிகளால் நம்பப்படுகிறது. இதற்கிடையில் மாலையில் லேசான தூறல் விழுந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனர். இருப்பினும் இரக்கப்பட்டதோ என்னவோ மழை வரவில்லை. கடந்த சில நாட்களாக மந்தமாக இருந்த விற்பனை இன்று காலைமுதல் களைக்கட்டியது.

மக்களின் கூட்டம் அதிகளவில் இருப்பதால் காந்திஜி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வழக்கமாக காந்திஜி சாலையில் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதே போன்று பழைய பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து காந்திஜி சாலையின் மையப்பகுதியிலும் ஏராளமான தரைக்கடை வியாபாரிகள் தற்காலிக கடைகளை அமைத்து புத்தாடைகள் வாங்குவதற்காகவும், இதர பொருட்கள் வாங்குவதற்காகவும் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் காந்திஜி சாலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே தென்பட்டன.

பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் அந்த பகுதியில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் போலீசார் வாகனங்களிலும் ரோந்து வந்த வண்ணமும் இருந்தனர்.

Continues below advertisement