Mahalaya Amavasya 2021: புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய, 15 நாட்களும் மகாளய பட்ச காலம். இதில், பக்ஷம் என்பது 15 நாட்களை குறிக்கும். புரட்டாசி பவுர்ணமியில் துவங்கி, அமாவாசை உள்ள 15 நாட்களே மகாளய பட்ச காலம். கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற ஆன்மிக நுால்களில், மகாளய பட்சத்தின் சிறப்புகள் விளக்கப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில் நம் முன்னோர், நமக்கு ஆசி வழங்குவதற்காகவே, பிதுர் லோகத்தில் இருந்து நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருவர் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மகாளய பட்சம், செப்., 21ம் தேதி துவங்கியது. மகாளய அமாவாசை அன்று தான், நம் முன்னோர்கள் வீடுதேடி வந்து ஆசிர்வதிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. அன்று பித்ருக்களுக்கு திதி கொடுப்பதை, பரம்பரை பரம்பரையாக மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.அத்தகைய சிறப்பு மிக்க மகாளய அமாவாசையில், தமிழகம் முழுதும் புண்ணிய நதிகள், சமுத்திரம் போன்ற இடங்களில் புனித நீராடி, முன்னோருக்கு திதி கொடுத்து, தானம் செய்வது வழக்கம். அவ்வாறு திதி கொடுக்க தவறினால், முன்னோர் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, வாழ்க்கையில் முன்னேற்றம் போய்விடும் என்பதும் மக்கள் நம்பிக்கை. அத்தகைய சிறப்பு மிக்க மகாளய அமாவாசை இன்றுதான்.
பெருந்தொற்று காலம் என்பதால் கடல் மற்றும் ஆறுகளில் நீராடி தர்ப்பண பூஜை செய்ய முடியாதவர்கள், தங்கள் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய நாளை 6-ந் தேதி தங்கள் வீட்டிலேயே அதிகாலை சீக்கிரமாகவே எழுந்து சுத்தமான நீரில் நீராட வேண்டும், காலை உபவாசம் இருந்து தொடங்கி மதியம் படையல் போட்டு அவர்களை வணங்க வேண்டும். மதியம் சாப்பிடுவதற்கு முன்பு காக்கைக்கும் பசு மாட்டிற்கும் உணவிட வேண்டும். எழைகளுக்கு முடிந்த அளவுக்கு பொருளுதவி செய்ய வேண்டும்,பசி என வருபவர்களுக்கு முடிந்த வரையில் சாப்பாடு போடவேண்டும். என்கின்றன சாஸ்திரங்கள். அதன்பின்னர் பித்ருக்கள், குலதெய்வம், இஷ்ட கடவுளை வேண்டி மதிய உணவு சாப்பிட்டு மகாளய விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். இதனால் நமது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும். நாமும் நல்வாழ்வைப் பெறலாம்.
இந்த நாளில் மது புகை பழக்கம் கூடாது, புலால் உண்ணாமையை கடைப்பிடிக்க வேண்டும், குறிப்பாக நாம் சாப்பிடும் உணவில் பூண்டு வெங்காயம் சேர்க்கக்கூடாது. கணவன் மனைவிகள் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இதையெல்லாம் கடைப்பிடிப்பதால் நமது முன்னோர்கள் நம்மையும் நமது சந்ததியினரையும் ஆசீர்வதிப்பார்கள். பித்ரு சாபம் தீரும். உடல் உபாதைகள் நீங்கும். என்றென்றும் வீட்டில் செல்வம் கொழித்து மிகவும் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்பது நமது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த பதினைந்து நாட்களில் குறைந்த பட்சம் இரண்டு நாட்களாவது தர்ப்பணம் விடுவது சிறப்பு என கூறப்படுகிறது.