வட கிழக்கு பருவ மழை தொடங்கியதைடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்றது. தஞ்சாவூரில் 368 மிமீ, திருவையாற்றில் 91 மிமீ, பூதலுாரில் 228.20 மிமீ, ஒரத்தநாட்டில் 270 மிமீ, கும்பகோணத்தில் 120 மிமீ, பாபநாசத்தில் 213.40 மிமீ,  திருவிடைமருதுாரில் 316.80 மிமீ, பட்டுக்கோட்டையில் 583.70 மிமீ, பேராவூரணியில் 196 மிமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 2387.70 மிமீ அளவில் மழை பெய்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு 501.53 மிமீ, 2021 ஆம் ஆண்டு இன்று வரை 1259.85 மிமீ அளவு பெய்துள்ளது. கடந்தாண்டுடன் இந்த ஆண்டை ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பட்டுக்கோட்டை தாலுக்காவில் 583.70 மிமீ மழை பெய்துள்ளது.


கும்பகோணம் தாலுக்கா தேனாம்படுகை கிராமத்தை சேர்ந்த மணி மகன் கௌதமன் (28) குடும்பத்துடன் தொகுப்பு வீட்டில் வசித்து வந்தனர். தொடர் மழையினால் மற்றும் கௌதமன் மற்றும் மகள் அனன்யா (4) ஆகிய இருவர் மீது மண் சுவர் இடிந்து விழுந்து பலத்த காயமடைந்தனர். இருவரையும், அப்பகுதியினர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதே போல் திருவிடைமருதுார் தாலுக்கா தேப்பெருமாநல்லுார், பெரியார் நகர், மாணிக்கநாச்சியார் கோயில் தெருவை சேர்ந்த ராமைய்யன் மகன் கனகராஜ் (37) என்பவர் ஒட்டு வீட்டில் வசித்து வந்தார். தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, கனகராஜ் மற்றும் இவரது மனைவி சுந்தரி (32) ஆகியோர் மீது விழுந்து, இருவரின் கால்கள் உடைந்தது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


கும்பகோணம் பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால், மழை நீர் வடியாமல் தேங்கி, குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வெளி மாவட்டத்திலிருந்து வரும் பயணிகள், இயற்கை உபாதைகள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், பேருந்து நிலையம் தேங்கியுள்ள மழை நீரில், கழிவுகள், மீதமான அழுகிப்போன பழங்கள், உணவுகழிவுகள் மிதப்பதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. பகல் இரவு நேரங்களில் கொசுக்கள் தொல்லையால், பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் பைபாஸ் சாலையில் சுந்தரபெருமாள்கோயில் அருகில், திருச்சியிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஜீப் பலத்த மழையினால், நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.