வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து தஞ்சாவூர் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பெய்து வருகின்றது. தஞ்சாவூர் தாலுக்காவில் 181 மிமீ, திருவையாறு தாலுக்காவில் 69 மிமீ, பூதலுார் தாலுக்காவில் 163  மிமீ, ஒரத்தநாடு தாலுக்காவில் 112 மிமீ, கும்பகோணம் தாலுக்காவில் 62 மிமீ, பாபநாசம் தாலுக்காவில் 172 மிமீ, திருவிடைமருதுார் தாலுக்காவில் 106 மிமீ, பட்டுக்கோட்டை தாலுக்காவில் 149 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக மழை தஞ்சாவூரில் பெய்துள்ளது,  கடந்த 2019 ஆம் ஆண்டு இதே நாளில் 687.42 மிமீ, 2020 ஆம் ஆண்டு 576.16 மிமீ, 2021 ஆம் ஆண்டு 1362.56 மிமீ அளவு பெய்துள்ளது. கடந்தாண்டுகளை விட இந்தாண்டு இரண்டு மடங்கிற்கு மேல் மழை பெய்துள்ளது. தஞ்சை  மாவட்டத்தில்  கடந்த நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக 9 தாலுகாவிலும் 90 குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இது தவிர கான்கிரீட் மற்றும் ஓட்டு வீடுகள் 11-ம் சேதம் அடைந்தன.




இந்நிலையில், தஞ்சாவூர், பாம்பாட்டித்தெருவை சேர்ந்தவர் சேகர். இவர்  கொடிமரத்துமூலையில் பகுதியில் பல ஆண்டுகளாக விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்துகள், உரங்கள் விற்பனை நிலையம் இயங்கி வருகின்றது. மிகவும் பழமையான கட்டிடத்தில் இருந்ததால், கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால் பக்கவாட்டு மண் சுவர் மழை நீரில் ஊறி விழுந்தது. அந்நிறுவனத்தில் விவசாயிகள் உரங்களை வாங்குவதற்காக வந்து செல்லும் நிலையில், சுவர் இடிந்து விழுந்த போது, யாரும் இல்லாததால் அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. சுவர்  விழுந்த பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து, களைக்கொல்லி மருந்து உள்ளிட்டவை இருந்தன. இவை அனைத்தும் சுவரில் இடிந்து விழுந்ததில் உடைந்து சேதம் அடைந்தன. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.




இதே போல் திருவையாறு தாலுக்கா, அம்மன்பேட்டை கிராமத்தில் பலத்த மழையினால் சுமார் 100 ஏக்கர் சம்பா சாகுபடி நாற்றுக்கள் மழை நீரில் முழ்கின. வயல்களில் தேங்கியுள்ள மழை நீர், வடிவதற்கு, வடிகால் வாய்க்கால்களை துார் வாராததால், வயலிலேயே மழை நீர் தேங்கி நிற்கின்றது. கடந்த சில வருடமாக அப்பகுதியிலுள்ள வடிகால் வாய்க்கால்களை, விவசாயிகள் தங்களது சொந்த செலவில் துார் வாரி வந்தனர். இந்தாண்டு, தமிழக அரசு அனைத்து வாய்க்கால்களையும் துார் வாரப்படும் என அறிவித்ததால், விவசாயிகள் வடிகால் வாய்க்கால்களை துார் வாராமல் விட்டு விட்டனர். மாவட்ட நிர்வாகம் வடிகால் வாய்க்கால்களை துார் வாராமல் விட்டு விட்டனர். இதனால்  அம்மன்பேட்டை கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் நெல் வயல்கள் நீரில் முழ்கி விட்டன.