காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, இதேபோன்று காரைக்கால், புதுச்சேரி, உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பத்து தினங்களுக்கு மேலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை விட்டிருந்த நிலையில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களில் சூழ்ந்திருந்த மழை நீரை வடிய வைக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையத்தின் சார்பில் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.



இந்த நிலையில் டெல்டா மாவட்டமாகிய திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை இரவும் பகலுமாக  கொட்டித் தீர்த்தது. நேற்று இரவு வரை மழை விடாமல் தொடர்ந்து பெய்த நிலையில் இன்று அதிகாலை முதல் மழை விட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் இரண்டாம் முறை நெல் பயிர்கள் மூழ்கும் என்ற அச்சத்தில் உள்ளனர். நேற்று மதியம் முதல் பெய்துவரும் தொடர் கனமழையின் எதிரொலியாக டெல்டா மாவட்டங்களில் மீண்டும் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் அமைச்சர்கள் குழு கடந்த வாரம் பெய்த தொடர் கன மழையில் திருவாரூர் மாவட்டத்தில் 41 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதாக அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நேற்று மதியம் முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரண்டாவது முறையாக மேலும் 10 ஆயிரம் ஏக்கர் மழை நீரில் மூழ்கியுள்ளன.



 

திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரில் பயிர்கள் மூழ்கியுள்ளது. இரண்டு முறை உரம் தெளித்தும் பயனற்றுப் போய்விட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இடுபொருள் மட்டும் போதாது ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பயிர் பாதித்த இடங்களை ஆய்வு செய்து கூடுதல் நிவாரண தொகையை பெற்றுத் தர வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.