வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தென் மாவட்டங்கள், மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், வருகிற 23-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் குமரிக்கடல் மன்னார்வளைகுடா உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் கனமழையால் திருவாரூர் ரயில்வே கீழ் பாலம் முழுவதுமாக மழைநீர் வடியாமல் தேங்கியிருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் இரண்டு அடி அளவு மழை நீரில் கஷ்டப்பட்டு தங்களது வாகனத்தை ஓட்டிச் சென்றனர். உடனடியாக திருவாரூர் நகராட்சி நிர்வாகம் மழை நீரை வடிய வைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த கனமழையின் காரணமாக சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குறுவை அறுவடை பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் மழை நீரில் மூழ்கி முழுவதுமாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது, இதனால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.



 

இந்த நிலையில் மன்னார்குடி அருகே பாலையூர் என்ற இடத்தில் வயலில் நடவு பணி நடைபெற்று வந்துள்ளது. அப்பொழுது கடுமையான இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தினால் வயலில் வேலை செய்து கொண்டிருந்த குமார் என்கிற விவசாய தொழிலாளி இடி தாக்கி  கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த சக விவசாய கூலித் தொழிலாளர்கள் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் அவரை சோதனை செய்த பின்னர் அவர் உயிரிழந்து விட்டார் என தகவல் தெரிவித்தனர். இதனால் அவருடன் வேலை பார்த்த சக தொழிலாளர்களும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த வேதனை அடைந்தனர். உயிரிழந்த விவசாய கூலி தொழிலாளிக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.