தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் "நடப்போம் நலம் பெறுவோம்"  (ஹெல்த் வாக்) என்ற திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் தூரம் தேர்வு செய்யப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான இடங்களை தேர்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மயிலாடுதுறை தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள  இடம் வரை சென்று வர 8 கிலோமீட்டர் தேர்வு  செய்யப்பட்டுள்ளது.





இந்நிலையில், அந்த இடத்தினை இன்று காலை மயிலாடுதுறையில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி செய்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து உறுதிப்படுத்துவதற்கான  ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மயிலாடுதுறை தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நடப்போம் நலம்பெறுவோம் என்ற தலைப்பில் அமைச்சர் மா.சுப்ரமணியன் நடைபயிற்சியை துவங்கினார். தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மீண்டும் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் வரை 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார். 




இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, உள்ளிட்ட மருத்துவத்துறை வருவாய்துறை அதிகாரிகள் மாணவ மாணவிகள், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் இந்த நடைபயிற்சியில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து  தேசியக் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக  மாநில அளவில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியை மயிலாடுதுறையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.




அதனையடுத்து அவர் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இன்று குடற்புழு நீக்க  மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் இங்கு தொடங்கி வைக்கப்பட்டது. விடுபட்டவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 24 ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள அங்கன்வாடி மையங்கள்  54,439 இருக்கின்றன. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 46,260, தனியார் பள்ளிகள் 12,526 செயல்படுகின்றன. அனைத்து வகையான கல்லூரிகள் 3,082 உள்ளது. ஆகிய இடங்களில் இந்த குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படுகின்றது.




இதில் 1 முதல் 19 வயது  வரை உள்ள குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய கருவுறாத மற்றும் பாலூட்டாத பெண்களுக்கும், குடற்புழு நீக்க  மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.  1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ½ மாத்திரை (200 மி.கி),  2 வயது மேற்பட்டவர்களுக்கு 1 மாத்திரை (400 மில்லி கிராம்) அல்பெண்டசோல் எனும் மாத்திரை உட்கொள்வதினால் குடற்புழுக்கள் முற்றிலும் நீக்கப்படுகிறது. இதன்மூலம் இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் உடல்வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இதில் பயன்பெற்ற பயனாளிகள்  1 வயது முதல் 19 வயது வரை குழந்தைகள்  2.15 கோடியும்,  20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் 54.67 லட்சம், மொத்த பயனாளிகள் 2 கோடியே 69 இலட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.




இதில் அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள் என மொத்தம் 1,30,589 நபர்கள் இந்த மாத்திரைகள் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.“குடற்புழு தொற்றிலிருந்து விடுபட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்கால வாழ்விற்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம்”. என தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார்,  பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன்,  சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மருத்துவத்துறை இயக்குனர் செல்வநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் கலந்துகொண்டார்.