சாமந்தான்பேட்டையில் 40 கோடி ரூபாய் மதிப்பில் தூண்டில்  வளையுடன் கூடிய மீன்பிடி துறைமுகம் கட்டப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர். 


நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 200க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் வைத்து கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு மீன்பிடித் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.



 

இந்த நிலையில் இயற்கை சீற்றம் மற்றும் கடல் சீற்றம் காலங்களில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி பாதிப்படைகிறது. இதே போல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போதும் கரை திரும்பும் போதும் பாதிக்கப்படுவது வழக்கமாக ஒன்றாக உள்ளதால் இவர்கள் தூண்டில் வளைவு துறைமுகம் அமைத்து தர வேண்டும் என நெடுங்கால கோரிக்கையாக வைத்திருந்தனர். கடந்த ஆட்சியின் போது இவர்கள் சாலை மறியல், கடலில் இறங்கி போராட்டம், தீப்பந்தம் ஏற்றி போராட்டம், படகில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் என பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

 

தற்போது துறைமுகம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை துவங்க வேண்டும் எனவும்  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனுவும் அளித்திருந்தனர். இந்நிலையில்  நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் மு க. ஸ்டாலின் சாமந்தான்பேட்டையில் 40 கோடி ரூபாய் மதிப்பில் சிறு துறைமுகம் கட்டப்படும் என அறிவித்தார்.



 

இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்துள்ள, நாகை சாமாந்தான்பேட்டை மீனவர்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மற்றும்  நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். புதிய துறைமுகம் அறிவிப்பை தொடர்ந்து முதன்முறையாக நாகை சாமந்தான்பேட்டை மீனவர்கள் இன்று ஒரு நாள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்காக சாமந்தான்பேட்டை கடற்கரையில் குவிந்த மீனவர்கள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஃபைபர் படகு அருகே  பட்டாசுகளை வெடித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை வாழ்த்தி, வாழ்த்து கோஷங்களையும் எழுப்பினர்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண