தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு இறுதிப்பருவத்தை எட்டியுள்ள நிலையில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.  இதனை மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் எழுதி வருகின்றனர். முன்னதாக 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுகள் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.




இதன்பின்னர் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய  11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று (ஏப்ரல் 5) ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில் 4,66,765 மாணவர்களும், 4,55,960 மாணவிகளும் என மொத்தம் 9,22,725 பேர் எழுதுகின்றனர். இதேபோல் புதுச்சேரியில் 7,911 மாணவர்களும், மாணவிகள் 7,655 பேரும் என மொத்தம் 15, 566 பேர் எழுதுகின்றனர். அதேசமயம் தனித்தேர்வர்கள் பிரிவில் மாணவர்கள் 26,352 பேரும், மாணவிகள் 11, 441 பேரும், 5 திருநங்கைகள் என மொத்தம் 37,798 பேர் தேர்வு எழுதுகின்றனர்.




மேலும் 264  சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் 13,151 பேரும் எழுதுகின்றனர். மொத்தமாக நடப்பாண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,76,089 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 4,025 மையங்களில் 12,639 தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் அதிகளவில் மாணவர்கள் வராத நிலையில் அதற்காக கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அந்த மாதிரி ஆப்சென்ட் நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க தேர்வு மையங்களை கண்காணிக்கும் படை, முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இயங்கும் பறக்கும் படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.




அதேபோல் வினாத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லவும், விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லவும் உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. 10 மணிக்கு புகைப்படம், பதிவெண்,  பாடம் முதலான விவரங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். இவற்றை சரிபார்த்த பின் 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வுகள் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 6360 மாணவர்களும், 6142 மாணவியர்களும் சேர்த்து மொத்தமாக 12,502 தேர்வர்கள் எழுத உள்ளனர். மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக மாவட்டத்தில் 50 பொதுத் தேர்வு மையங்களும் 3 தனித் தேர்வர்களுக்கான மையங்கள் என 53 பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதுவதை கண்காணித்திட  810 அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் 77 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 




மேலும், சொல்வதை எழுதுபவர் (Scribe) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 138 மாணவ, மாணவியர்களுக்கும் தேர்வு எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்கள் அனைத்தும் தூய்மை செய்யப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்கவும்,  குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகள் தகுந்த முறையில் வழங்கிட  மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளனவா? என்றும் மாணவர்கள் தேர்வு எழுதுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.