இரு கன்று குட்டிகளை விற்று மகனின் படிப்பு செலவுக்கு வைத்திருந்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஒருவர், தன் மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக வளர்த்து வந்த இரண்டு கன்று குட்டிகளை விற்று ரூ.6 ஆயிரத்தை இன்று மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். தஞ்சாவூர் அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(52). பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளியான இவர் சமூகத்தின் மீது  அக்கறை கொண்டவர். இவரது மனைவி மகேஷ்வரி(42). இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் பிரசாந்த் (20), பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ள சஞ்சய் (17) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

ரவிச்சந்திரன் 100 நாள் வேலை செய்து வருகிறார்.அதில் வரக்கூடிய சம்பளம், மற்றுத்திறனாளிகளுக்கு  மாதந்தோறும் கிடைக்கும் உதவித்தொகை ரூ.1,000 ஆகிய இந்த சொற்ப வருமானமே அவரது குடும்பத்துக்கான ஆதாரம். கண் பார்வை குறைபாடு ஒரு பக்கம், போதிய வருமானம் இல்லாத நெருக்கடி மறுபக்கம் என தன்னையும், தன் குடும்பத்தையும் கடும் பொருளாதார நெருக்கடி சூழ்ந்திருக்கும் போதிலும், தன்னை போல் கஷ்டப்படும் மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும், அரசு சார்பில் கிடைக்க கூடிய உதவிகளையும்  பெற்று வறியவர்களின் வழி காட்டியாகவே வாழ்ந்து வருகிறார். தன் கண் முன்னே நடக்கும் அவலங்களையும் தட்டி கேட்க துளியும் தயங்காதவர்.

 

கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நீர் நிலைகளை மீட்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு  வந்து மனுக்கள் கொடுத்து முயற்சி மேற்கொண்டதன் விளைவாக அப்பகுதியில் இரண்டு ஏரி  மீட்கப்பட்டிருப்பதுடன், தூர் வாரப்பட்டு  பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தன் இளைய மகனை கல்லூரியில் சேர்க்க, சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தில் இரு கன்று குட்டிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். மகன் சஞ்ஜயை கல்லூரியில் சேர்க்கும்போது பணம் இல்லாமல் அவனது படிப்பு தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்த சமயத்தில் கன்று குட்டிகளை விற்று அந்த பணத்தின் மூலம் மகனை கல்லூரியில் சேர்த்து விடலாம்  என்ற முன்னேற்பாடாகவே இதனை செய்துள்ளார்.



இச்சூழலில் கொரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளின்படி, ரவிச்சந்திரனும் நிவாரண நிதி வழங்க முடிவு செய்தார். இதற்காக கொஞ்சமும் யோசிக்காமல் மகனின் படிப்புக்காக வளர்த்து வந்த இரண்டு கன்று குட்டிகளை விற்று ரூ.6 ஆயிரத்தை முதலமைச்சரின் நிவாரண  நிதிக்கு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கினார். நிதியை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், ரவிச்சந்திரனின் செயலை வெகுவாக பாராட்டினார். 

 

இதுகுறித்து ரவிச்சந்திரன் பேசுகையில், ”நான் பிஎஸ்சி,பிஎட் படித்து விட்டு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தேன். எல்லாம்  நல்லா போய்க்கிட்டிருந்த நேரம் அது. 20 வருஷத்துக்கு முன்னால் திடீரென கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சம் பார்வை சுத்தமா மங்கி போனது. கண் தெரியாததால் ஆசிரியர் வேலையை விட வேண்டிய நிலை வந்தது. அதன் பிறகு என்னோட சேர்ந்து என் மனைவி, பிள்ளைகள் பட்ட கஷ்டத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. பகல் நேரத்தில் கூட வெளியே செல்ல வேண்டும் என்றால் யாருடைய உதவி இல்லாமலும்  போகமுடியாது, இரவு நேரத்தில் நிலைமை இன்னும் மோசம். இருந்தாலும், சமுதாய பணிகளில் கவனம் செலுத்தி வருகிறேன். என்னைப்போன்ற  மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கிடைக்காமல் தவித்த 20 பேருக்கு உதவித்தொகை வாங்கி கொடுத்திருக்கிறேன். மனநலம் குன்றிய மூன்று பேருக்கு மாதம் தோறும் கொடுக்கப்படும்  பராமரிப்பு தொகை ரூ 1,500 பெற்று கொடுத்துள்ளேன். 50-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு முதியோர் உதவி தொகை கிடைக்க காரணமாக இருந்திருக்கிறேன். விழி இல்லாத நான் பலருக்கு வழி காட்டியாக இருக்கிறேன். அதனால் குறைகள் மறந்து மனசுக்கு நிறைவாக இருக்கிறது. 



 

கொரோனா தடுப்புப் பணியின் நிவாரண நிதிக்கு என்னால் முடிந்ததை செய்ய  நினைத்தேன், கையில் பணம் இல்லை. உடனே என் மகனை கல்லூரியில் சேர்க்க வளர்த்து வந்த கன்று குட்டிகளை விற்றுவிட்டேன். அதன்மூலம் கிடைத்த ரூ.6,000 பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்துவிட்டேன் என்றார். இத்தகைய மனம் படைத்தவரை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.