கொரோனோ வைரஸ் தொற்று பரவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு பெரும் இன்னலை கொடுத்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனோ வைரஸ் தொற்று குறைந்த நிலையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஒரு தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த 11 மாவட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டமும் ஒன்று.




இந்நிலையில்  மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை  குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில், புதன்கிழமை ஒருநாளில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 422 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆகவும் பதிவாகியுள்ளது. இதுவரை முப்பத்தி மூன்று ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி இரண்டு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இருபத்தி ஒன்பதாயிரத்து நூற்று தொண்ணூறு பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் தற்போது நான்கு ஆயிரத்தி முன்னூற்று அறுபத்து ஐந்து பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் நேற்று மட்டும் எட்டு பேர் உயிரிழந்ததை அடுத்து மாவட்டத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை நானூற்று பதினேழாக உயர்ந்துள்ளது. 




இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் ஊராட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் லலிதா மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா பரவலை ஊராட்சி அளவிலேயே கட்டுப்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழுவினர் ஊராட்சியில் யாருக்கேனும் சளி, காய்ச்சல், உடல்சோர்வு, சுவையின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பின் அவர்களை அருகில் உள்ள கொரோனா வகைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்கள் வீட்டிலேயே இருப்பதை தன்னார்வலர்கள் உறுதிசெய்ய வேண்டும். தன்னார்வலர்களின் இப்பணியை ஊராட்சித் தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.





மேலும், மாவட்டத்தில் தொற்று அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு ஊராட்சிகளில் உள்ள மக்கள் பயனடையும் வகையில் வட்டார அளவில் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன எனவும், பொதுமக்கள் கொரோனா தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் இந்த கட்டுப்பாட்டு அறையை அணுகி தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் என்றார். இக்கூட்டத்தில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரகாஷ் மற்றும் மயிலாடுதுறை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்துகொண்டு ஊராட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள் குழுவினர்களுக்கு கொரோனா பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.