திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பெரும்பண்ணையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பா சுப்ரமணியன். இவர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது குத்தாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது மூத்த மகன் வெற்றியழகன் என்பவர் பொறியியல் முடித்துவிட்டு மேற்படிப்புக்காக லண்டன் சென்று உள்ளார். அங்கேயே பணி கிடைத்து கடந்த 15 வருடங்களாக மனைவி குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகிறார். இவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த மே நான்காம் தேதி இங்கிலாந்து நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் லண்டன் செம்ஸ் போர்டு சிட்டியில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக கவுன்சிலர் வேட்பாளராக வெற்றியழகன் அறிவிக்கப்பட்டார். குறிப்பாக லண்டன் செம்ஸ் போர்டு சிட்டியை பொருத்தவரை பொதுவாக லிபரல் டெமோகிராட்ஸ் என்கிற கட்சி பலம் பொருந்திய ஆதிக்கம் செலுத்தக்கூடிய கட்சியாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி இந்த தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் வெற்றியழகன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட டெமோகிராட்ஸ் கட்சி கவுன்சிலர் ஃபேன் பேட்ரிக் மேனலியை விட 163 வாக்குகள் அதிகம் பெற்று முதல் முறையாக லண்டன் செம்ஸ்போர்ட் சிட்டி கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக விலைவாசி உயர்வு மற்றும் சில காரணங்களால் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடு முழுவதும் ஒரு சிறிய பின்னடைவை இந்த உள்ளாட்சி தேர்தலில் சந்தித்த போதும் வெற்றியழகன் அந்த கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் 80 சதவீதம் ஆங்கிலேயர்களும் 20 சதவீதம் இந்தியர்களும் வசித்து வருகின்றனர். மேலும் வானொலியை கண்டுபிடித்த மார்கோனி பிறந்த ஊர் இந்த செம்ஸ் போர்ட் சிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வெற்றியழகனின் தந்தையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பா சுப்ரமணியன் கூறுகையில், “முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன் சென்றபோது எனது மகன் அவரை சிறப்பாக வரவேற்றுள்ளான். இந்த நிலையில் லண்டன் சிட்டி தேர்தலில் எனது மகன் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதைவிட எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தது அதைவிட மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.